TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6ம் தேதி தொடங்க உள்ளது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அது விவாதித்து பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். இந்த முறை ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறேன் என்றும் அப்பாவு கூறினார்.
6ம் தேதி சட்டசபை கூட்டம்:
தமிழக சபாநாயகர் அப்பாவிடம் எத்தனை நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார். ஜனவரி 6ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை நடைபெறும். பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் ஆண்டில் முதல் கூட்டம் 4 அல்லது 5 நாட்களுக்குள் மட்டுமே நடைபெறும்.
அதன்பின்பு, நடைபெறும் கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படும். அதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரின்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆளுநர் vs தி.மு.க. அரசு:
2023ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடரின் பாதியில் இருந்தே வெளியேறினார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், நடப்பாண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போதும் பாதியிலே வெளியேறினார்.
தி.மு.க. அரசு அமைந்தது முதலே ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பன்வாரிலால் புரோகித்திற்கு பிறகு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியுடனான, ஆளுங்கட்சியின் மோதல் பல்வேறு சம்பவங்களால் வலுத்து வருகிறது.
பல கோப்புகளுக்கு கையொப்பமிடாமல் தாமதப்படுத்தியது, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை, தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை என ஆளுநருக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையேயான மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்து வருகிறது. சமீப நாட்களாகவே ஆளுநர் – அரசு இடையேயான மோதல் குறைந்துள்ளது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான நடப்பு ஆட்சியின் முழுமையான கடைசி ஆண்டு என்பதால் சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம், அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சைப் பேச்சு இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாகவும் சட்டசபையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், தி.மு.க. அரசின் எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமான அறிவிப்புகள் அடுத்தண்டு நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம்.