RR vs DC, 1 Innings Highlight: ஜோஸ் பட்லர், ஜெய்ஷ்வால் மிரட்டல் அடி.. டெல்லி அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டெல்லி - ராஜஸ்தான் மோதல்:
ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அதேநேரம், வார்னர் தலைமையிலான டெல்லி அணி இதுவரை விளையடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி அணியும் முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளன.
ராஜஸ்தான் அதகளம்:
இதையடுத்து உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக போட்டியின் முதல் ஓவரிலேயே ஜெய்ஷ்வால் 5 பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். இதன் மூலம் 25 பந்துகளிலேயே அரைசதம் விளாசினார். தொடர்ந்து 31 பந்துக்ளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 60 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கேட்ச் முறையில் அவுட்டானார். சக தொடக்க ஆட்டக்காரரான பட்லரும் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
ஜெய்ஷ்வாலை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பராக் 7 ரன்களில் நடையை கட்டினார்.
டெல்லி அணிக்கு ரன்கள் இலக்கு:
அடுத்து வந்த ஹெட்மேயர் அதிரடியாக விளையாடி 39 ரன்களை சேர்த்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய பட்லர், 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 79 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை சேர்த்தது. இதையடுத்து வார்னர் தலைமையிலான டெல்லி அணி என்ற இலக்கை எட்டுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆரஞ்சு தொப்பி:
இந்த போட்டியில் 79 ரன்களை சேர்த்ததன் மூலம், நடப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடி ஜோஸ் பட்லர் 152 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஆரஞ்சு தொப்பியை தனதாக்கியுள்ளர். அந்த பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், கைல் மேயர்ஸ், ஷிகர் தவான் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெறும் 4 ரன்களை சேர்த்தால், ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.