MI vs GT, Match Highlights: ‘ஒன் மேன் ஆர்மி’ ரஷித்கான் போராட்டம் வீண்.. குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி வெற்றி..!
IPL 2023, MI vs GT: ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
IPL 2023, MI vs GT: ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் . டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் தனது அணி பந்து வீசும் என அறிவித்தார்.
மாஸ் காட்டிய மும்பை வீரர்கள்
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் குஜராத் பந்துவீச்சை தொடக்கம் முதலே நன்கு அடித்து ஆடினர். இதனால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆட்டத்தின் 7வது ஓவரை வீசிய ரஷித் கானின் பந்து வீச்சில் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் பின்னால் சூர்யகுமார் யாதவ் பாரபட்சம் பார்க்காமல் குஜராத் அணி பந்துவீச்சை வெளுத்தெடுத்தார். இதனால் மும்பை அணியின் ரன் வேகம் உயர்ந்தது. கடைசி மூன்று ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். இதனால் மும்பை அணி இந்த 5வது முறையாக 200 ரன்களை தாண்டியது. மேலும் போட்டியின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தினை சூர்யகுமார் யாதவ் பூர்த்தி செய்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது.
நடையைக் கட்டிய குஜராத் அணி
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அடித்து ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட தொடங்கிய வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் அணி 100 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தங்கள் அணி விரைவாக வெற்றி பெறும் என நினைத்த மும்பை வீரர்களின் எண்ணத்தை ரஷித் கான் தவிடுபொடியாக்கினார்.
கடைசிக்கட்டத்தில் சிக்ஸர்களாக மிரட்டி மும்பை அணியை அலற வைத்தார். குஜராத் அணியில் ரஷீத் கான் 79 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். அதேசயம் டேவிட் மில்லர் 41 ரன்கள், விஜய் ஷங்கர் 29 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பையின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.