MS Dhoni: இறுதி போட்டியில் களமிறங்கும் ’தல’.. தோனிக்கு தடை இல்லை..? ஒரு Fact Check இதோ..
சென்னை மற்றும் குஜராத் இடையேயான குவாலிஃபையர் 1 தகுதிச்சுற்றில் எம்.எஸ்.தோனி மீது அதிகளவிலான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்து வந்தது.
ஐபிஎல் 2023 சீசனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 28ம் தேதி (நாளை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி குவாலிஃபையர் 1ல் ஜிடியை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதனை தொடர்ந்து குஜராத் அணி குவாலியஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை மற்றும் குஜராத் இடையேயான குவாலிஃபையர் 1 தகுதிச்சுற்றில் எம்.எஸ்.தோனி மீது அதிகளவிலான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்து வந்தது. அதற்கு காரணம், பதிரனா பந்துவீச வைக்க தோனியின் முயற்சிதான். ஐபிஎல்லின் விதிகள் தொடர்பாக தோனி நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுதான் ஹாட் டாபிக்.
பிடிவாதமாக இருந்த தோனி..?
குவாலிஃபையர் 1ல் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இலக்கை துரத்தியபோது 16வது ஓவரை வீச தோனி, மதீஷா பதிரனாவை அழைத்தார். அப்போது, 12வது ஓவர் வீசிவிட்டு ஓய்வுக்காக வெளியே சென்ற, பதிரனா 8 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருந்தார். 16வது ஓவர் வீச உள்ளே வந்தபோது, மேலும், 4 நிமிடங்கள் விதிகளின்படி அவர் பீல்டிங் செய்திருக்க வேண்டும். இதனால் பதிரனாவை நடுவர்கள் பந்துவீச அனுமதிக்கவில்லை. இதையடுத்து, தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த வாக்குவாதமானது நான்கு நிமிடங்கள் நீடித்தது. பதிரனா பீல்டிங்கில் இருக்க வேண்டிய நான்கு நிமிடங்களும் முடிவுக்கு வந்தது. இறுதியில் பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
கால தாமத்தை ஏற்படுத்துவதற்காக எம்.எஸ். தோனி உள்நோக்கத்துடன் நடுவருடன் வாக்குவாதம் செய்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. மேலும், கட் ஆஃப் (குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர் வீச வேண்டும்) நேரத்திற்கு பிறகு 20 ஓவர்களை முடித்ததற்காக தோனி மீண்டும் மீண்டும் குற்றசாட்டு எழுந்தநிலையில், அடுத்த போட்டியில் அவர் தடை செய்யப்பட வேண்டும் எனவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
19வது ஓவர் முடிவதற்குள் போட்டி கட் ஆஃப் நேரத்தை தாண்டியிருந்தது. மேலும், 20 வது ஓவரில் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்கள் வைத்து சென்னை அணி பந்துவீசியது. அப்போது 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதால், போட்டி கட்டணத்தில் இருந்து தப்பினர்.
தோனிக்கு தடையா? விதிகள் சொல்வது என்ன?
லீக்கில் மூன்று முறை ஸ்லோ ஓவர் ரேட் விதிமீறல் செய்திருந்தால் மட்டுமே அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் தடை செய்யப்படுவார். இந்த சீசனில் தோனிக்கு இதுவரை ஒருமுறை மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குவாலிஃபையர் 1 பிறகு சென்னை அணியின் கேப்டன் நடுவர்கள் அபராதம் விதிக்கவில்லை. இதன் காரணமாக, தோனி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தலைமை தாங்கி களமிறங்குவார் என உறுதியாக சொல்லலாம்.