IPL 2023 MI vs PBKS Match Highlights: மும்பை பேட்டிங்கை உடைத்து நொருக்கிய அர்ஷ்தீப் சிங்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி..!
IPL 2023 MI vs PBKS 1st Innings Highlights: பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL 2023 MI vs PBKS: வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் அடித்து ஆடியது. சிறிய மைதானமான வான்கடேவில் பவுண்டரிகளை விளாசுவதில் பஞ்சாப் அணியினர் குறியாக இருந்தனர். கேமரூன் க்ரீன் வீசிய மூன்றாவது ஓவரில் ஷார்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு பின்னரும் பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி வந்தது. பவர்ப்ளேவில் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காத பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர் 7வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி வந்த பிராப்சிம்ரனை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுக்குப் பின்னரும் பஞ்சாப் அணி சிறப்பாக ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் 10வது ஓவரை வீசிய பியூஷ் சாவ்லா அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, அடுத்த நான்கு ஓவர்கள் மிகவும் மந்தமாக ஆடினர். 16வது ஓவரை வீசிய அர்ர்ஜுன் டெண்டுல்கரின் பந்து வீச்சின் முதல் பந்தினை சிக்ஸருக்கு விரட்டினார் சாம்கரன். இந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் ஒரு வைய்டு, ஒரு நோவ்-பால், ஒரு சிங்கிள் என மொத்தம் 31 ரன்கள் வாரி வழங்கினார். இறுதி நான்கு ஓவர்களில் பஞ்சாப் அணி சிறப்பாக ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி கடைசி ஐந்து ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் இஷான் கிஷன் ஒரு ரன்னில் வெளியேற கேமரூன் கிரீன் களத்திற்கு வந்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்த இவர் அதிரடியாக ஆட பவர்ப்ளே முடிவில் 54 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் சீராக ரன் ரேட்டை இருவரும் உயர்த்தினர். அரைசதத்தினை நோக்கி அதிரடியாக முன்னேறிக் கொண்டு இருந்த ரோகித் சர்மா 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆட, கேமரூன் க்ரீன் தனது அரைசத்தினை எட்டினார். 16 வது ஓவரில் க்ரீன் தனது விக்கெட்டை இழக்க, சூர்யாவுடன் டிம் டேவிட் கைகோர்த்தார்.
சூர்யகுமார் தனது அரைசத்தினை பூர்த்தி செய்த பின்னர் தனது விக்கெட்டை இழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரில் 15 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.