MI vs CSK, 1st Innings Highlights: பரிதாபமாக விக்கெட்டுகளை இழந்த மும்பை.. சென்னைக்கு 140 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னை - மும்பை மோதல்
ஐபிஎல் 16வது சீசன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த158 ரன்கள் இலக்கை, 18.1 ஓவர்களில் துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை அணி இன்று களமிறங்குகியது. அதோடு, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மும்பைக்கு பேரதிர்ச்சி:
இதையடுத்து மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேமரூன் கிரீன் வெறும் 6 ரன்களிலும், இஷான் கிஷான் 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை (16) டக்-அவுட் ஆன வீரர்களின் மோசமான பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார். இதனால் 14 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மும்பையை மீட்ட சூர்யா - வதேரா கூட்டணி:
தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வதேரா மற்றும் சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசியது. தொடர்ந்து 26 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் கிளீன் போல்டானார். சூர்யகுமார் - வதேரா கூட்டணி 55 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
சுழலில் நெருக்கடி:
சுழற்பந்துவீச்சை கொண்டு மும்பை அணிக்கு சென்னை அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால், 15 ஓவர்கள் வரை மும்பை அணியால் ஒரு சிக்சரை கூட அடிக்கமுடியவில்லை. பவுண்டரிகளும் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே அடிக்கப்பட்டது.
வதேரா அரைசதம்:
மறுமுனையில் வதேரா மட்டும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம், ஒரு சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட, 46 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை வதேரா பதிவு செய்தார். தொடர்ந்து 61 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த டிம் டேவிட்டும் 2 ரன்களிலும், அர்ஷத் கான் ஒரு ரன்னிலும் நடையை கட்டினர். சற்றே நிலைத்து நின்று ஆடிய ஸ்டப்ஸ் 20 ரனக்ளை சேர்த்தார்.
சென்னை அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளையும், சாஹர் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து மும்பை அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.