IPL 2023 Highest Score: இந்த தொடரில் இதுதான் அதிகபட்சம்.. ராஜஸ்தான் அணிக்கு தூணாக நின்று சதம் விளாசிய ஜெய்ஸ்வால்… !
ஜெய்ஸ்வால் ஒற்றை ஆளாக கொண்டு சேர்த்த ரன்னை மும்பை அணியின் அதிரடி வீரர்கள் அனைவரும் சேர்ந்து அடித்து துவம்சம் செய்தனர். இருப்பினும் அவர் அடித்த சதம் பல சாதனைகளை குவித்துள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்தது மட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பதிவு செய்தார்.
1000-வது ஐபிஎல் போட்டி
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது போட்டியாக நடைபெற்ற ஐபிஎல்-இந்த 1000-வது போட்டியில் மும்பை ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஐபிஎல் தொடரின் ட்ரெண்ட் போலவே இரு அணிகளும் 200க்கு மேல் ரன் குவிக்க மும்பை அணி அதிரடி காட்டி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் ஒற்றை ஆளாக போராடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினாலும், அந்த ரன்னை டிஃபண்ட் செய்யாததால் சதம் வீணானது. ஜெய்ஸ்வால் ஒற்றை ஆளாக கொண்டு சேர்த்த ரன்னை மும்பை அணியின் அதிரடி வீரர்கள் அனைவரும் சேர்ந்து அடித்து துவம்சம் செய்தனர். இருப்பினும் அவர் அடித்த சதம் பல சாதனைகளை குவித்துள்ளது.
இந்த தொடரின் அதிகபட்சம்
முக்கியமாக 1000-வது போட்டி என்பதால் இந்த சதம் இன்னும் ஸ்பெஷல் ஆனது. ஐபிஎல்-இன் முதல் போட்டியில் மெக்கலம் சதமடித்தது இந்த நேரத்தில் பலரால் நினைவு கூறப்பட்டது. இந்த சதம் ஜெய்ஸ்வாலின் முதல் ஐபிஎல் சதமாக அமைந்ததுடன், இந்த ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் ஒரே போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்னாக அமைந்துள்ளது. அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்துள்ளார்.
சர்ச்சையான விக்கெட்
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் சிக்ஸர் எண்ணிக்கையில் இரட்டிப்பாக பவுண்டரியும், எதிர்கொண்ட பந்துகள் எண்ணிக்கையில் இரட்டிப்பாக ரன்னும் குவித்துள்ளார். அதனால் உள்ளபடியே ஸ்ட்ரைக் ரேட்டும் சரியாக 200 ஆனது. மேலும் இவர் ஆட்டமிழந்த முறையும் கேள்விக்குள்ளானது. கடைசி ஓவரில் வீசப்பட்ட ஃபுல் டாஸ் பந்தை எதிர்கொண்ட அவர், அதனை தூக்கி அடிக்க சரியாக படாததால் பந்து வீச்சாளரிடமே கேட்ச் ஆனது. இடுப்பிற்கு மேலே சென்றதா என்று அம்பயர்கள் மூன்றாம் அம்பயருக்கு அனுப்பிய நிலையில் பந்து சரியாக இடுப்பளவில் சென்றது. இதனை சிலர் நோ-பால் என்றும், சிலர் சரியான பால் என்றும் கூறிய நிலையில், டிவி அம்பயர் சரியான பந்து என்ற முடிவுக்கு வந்தார். சமூக வலைதளங்களில் சிலர் அதனையும் விமர்சித்திருந்தனர்.
வெற்றி பெற்ற மும்பை அணி
இப்படியாக முழு டிராமாவாக சென்ற அவரது அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. களத்தில் இறங்கியது முதலே அதிரடி காட்டிய அவர் ஒரு பக்கம் விக்கெட் வாழ்ந்தாலும் தளராமல், தவறாமல் ஓவருக்கு ஒன்றிரண்டு பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்துக்கொண்டே இருந்தது ரன் எண்ணிக்கை உயர காரணமாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து ஆடிய மும்பை அணியின் தொடக்கம் சரியாக இல்லாமல் இருந்தாலும் பின்னர் வந்த கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி ரன்னை வேகமாக எடுத்துச் சென்றனர். 16வது ஓவரில் சூர்யகுமார் (29 பந்துகளில் 55 ரன்கள்) ஆட்டமிழக்க பின்னர் வந்த டிம் டேவிட் (14 பந்துகளில் 45 ரன்கள்) திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடி காட்ட மும்பை அணி ஆட்டத்தை வென்றது.