IPL 2023 Dhoni vs Kohli: இறுதியாக களத்தில் தோனியும் விராட் கோலியும்.. இதுவரை ஐபிஎல்லில் இவர்கள் எப்படி?
IPL 2023 Dhoni vs Kohli: இன்று நடக்கவுள்ள போட்டி இருவரும் கடைசியாக களத்தில் மோதிக் கொள்ளும் போட்டியாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டாலே ஒற்றுமையாக இருக்கும் நண்பர்கள் கூட்டம் கூட தங்களது அணிக்காக சண்டையிட்டுக்கொள்வார்கள். காரணம் தங்களுக்கு பிரியமான கிரிக்கெட் வீரர் எந்த அணியில் விளையாடுகிறாரோ அந்த அணிக்கு சப்போர்ட் செய்து பேசி சண்டையிட்டுக் கொள்வார்கள். அதில் மிகவும் குறிப்பாக அவர்களின் பிரியமான வீரர்கள் இதுவரை படைத்துள்ள சாதனைகளை விளக்கித்தான் அந்த சண்டைகளும் இருக்கும். ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தான். இவற்றில் இன்று (ஏப்ரல், 17) ஐபிஎல் போட்டியின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கபடும் சென்னை - பெங்களூரு அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த போட்டியின் மீது அதிக ஆவல் ஏற்பட காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனியும், பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது அணியில் வீரராக உள்ள விராட் கோலியும் தான். இந்த ஆண்டு தான் தோனி விளையாடும் இறுதி ஐபிஎல் என கூறப்படுவதால், இன்று நடக்கவுள்ள போட்டி இருவரும் கடைசியாக களத்தில் மோதிக் கொள்ளும் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
தோனி vs கோலி
இருவரும் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் விராட் கோலி மட்டும் 16 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை தோனி 238 மேட்சுகளிலும் விராட் கோலி 227 மேட்சுகளிலும் விளையாடி உள்ளனர். இதில் தோனி 209 மேட்சுகளில் பேட்டிங் செய்து 5 ஆயிரத்து 36 ரன்கள் குவித்துள்ளார். 219 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள விராட் கோலி 6 ஆயிரத்து 838 ரன்கள் விளாசியுள்ளார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் விளையாடி, அதன் பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி வரும் விராட் கோலி இதுவரை 5 சதங்களும் 47 அரைசதங்களும் விளாசியுள்ளார். அதேபோல், ஆறு அல்லது 7 வது விக்கெட்டுக்கு களமிறங்கும் தோனி 24 அரைசதங்கள் விளாசியுள்ளார். தோனி ஐபிஎல்லில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84* ஆகும். அதேபோல் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 113.
இருவரும் அதிரடியாக சிக்ஸர்களை விரட்டுபவர்கள் என்றாலும் இந்த வரிசையில் முன்னிலை வகிப்பது தோனி தான். விராட் கோலி இதுவரை 228 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். ஆனால் தோனி 238 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். ஆனால் பவுண்டரிகளைப் பொறுத்தவரையில் விராட் கோலி தான் முன்னிலை வகிக்கிறார். விராட் 597 பவுண்டரிகளிம் தோனி 348 பவுண்டரிகளும் விளாசி உள்ளனர். விராட் கோலியின் அவரேஜ் ஸ்ட்ரைக் ரேட் 129.65 ஆகவும் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 135.78 ஆகவும் உள்ளது.
விக்கெட் கீப்பரான தோனி 138 கேட்ச்சுகளை பிடித்து இருந்தாலும், மைதானத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யக்கூடிய கோலி இதுவரை 100 கேட்சுகளைப் பிடித்து அசத்தியுள்ளார். இருவரில் யார் சிறந்தவர் என்பதை விட இருவருமே மிகத் திறமையான கிரிக்கெட் வீரர்கள் என்பது தான் சரியானதாக இருக்கும்.