SRH vs GT: வானவேடிக்கை காட்டிய அபிஷேக்-மார்க்கரம் ஜோடி... சன்ரைசர்ஸ் 195 ரன்கள் குவிப்பு !
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசரஸ் அணி ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.
சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 5 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டினார். எனினும் அவர் 16 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 5 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்தது.
We will defend 1️⃣9️⃣6️⃣ tonight, after a superb batting effort 🧡#GTvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2022
இதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் எய்டன் மார்க்கரம் ஜோடி சேர்ந்து சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 12 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மார்க்கரம் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 17 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. எய்டன் மார்க்கரம் 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது யஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 3 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்