DC vs RR, Match Highlights: பயம் காட்டிய பவல்..கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ராஜஸ்தான் !
டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் மற்றும் படிக்கல் அதிரடி காடினர். பட்லர் 116 ரன்களுக்கும், படிக்கல் 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது.
223 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா நல்ல தொடக்கத்தை அளித்தனர். எனினும் வார்னர் 14 பந்துகளில் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த சர்ஃபராஸ் கான் 1 ரன்னில் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பிருத்வி ஷா டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 9 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 95 ரன்கள் எடுத்தது. 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த பிருத்வி ஷா அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் விளாசி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 12 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த அக்ஷர் பட்டேல் 1 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 10 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
16 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லி அணி வெற்றி பெற 24 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்தச் சூழலில் ராவ்மென் பவல் மற்றும் லலீத் சற்று அதிரடி காட்டினர். எனினும் ஆட்டத்தின் 19ஆவது ஓவரை பிரசீத் கிருஷ்ணா மெய்டன் ஓவராக வீசினார். அத்துடன் அந்த ஓவரில் அவர் லலீத் விக்கெட்டையும் எடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த டெல்லி அணியின் வீரர் ரோவ்மேன் பவல் 3 சிக்சர்கள் விளாசினார். எனினும் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்