KKR vs RR: தோல்வி.. தோல்வி... தொடர்ந்து கவிழும் கொல்கத்தா..-இன்றாவது வெற்றி பெறுமா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்புத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 3 தோல்வியை பெற்றுள்ளது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஆகவே அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முயற்சி செய்யும். எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற தீவிரமாக முயற்சி செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நடப்புத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 566 ரன்கள் எடுத்துள்ளார். இன்றையப் போட்டியிலும் இவர் பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நடப்புத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சற்று நல்ல ஃபார்மில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை 9 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 6 தோல்வியை தழுவியுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியுள்ளது.
எனவே தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் கொல்கத்தா அணி இன்று களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஒரளவு அணிக்கு ஆறுதல் அளிக்கிறார். அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் கடந்த சீசனின் நாயகன் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சரியாக விளையாடதது பெரும் பின்னடைவாக உள்ளது. இவர்கள் இருவரும் ஃபார்மில் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. கடந்தப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி அணியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் தேர்விலும் அதிக சிக்கல் உள்ளது. ரஸல் மற்றும் சௌதி தொடர்ந்து களமிறங்கி வருகின்றனர். அவர்கள் தவிர மற்ற 2 வீரர்கள் யார் என்பதில் அதிக சந்தேகம் உள்ளது. ஆரோன் ஃபிஞ்சு கடந்தப் போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடினார். இன்றைய போட்டியில் யார் யார் அணியில் இருப்பார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்