IPL 2022: குறைந்து போன டிஆர்பி ரேட்டிங்; என்னதான் ஆச்சு ஐபிஎல்லுக்கு...? அதிர்ச்சியில் விளம்பரதாரர்கள்... !
2022ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற அணிகள் அனைத்தும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளன. மற்ற ஐபிஎல் தொடரை போல் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாக உள்ளதாக டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இம்முறை ஐபிஎல் முதல் வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைந்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் வாரம் டிஆர்பி 3.85ஆக இருந்தது. அதேபோல் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் வாரம் டிஆர்பி 3.75ஆக இருந்தது. ஆனால் இவற்றிலிருந்து சுமார் 33% குறைந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் வாரம் டிஆர்பி 2.52ஆக உள்ளது. மேலும் இரண்டாவது வாரத்திற்கான 2022 ஐபிஎல் தொடரின் டிஆர்பி 28% குறைவாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவை தவிர வழக்கமாக ஐபிஎல் முதல் வாரத்தில் எப்போதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனல் முதலிடத்தில் இருக்கும். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் முதல் வாரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் டிஆர்பியில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரின் முதல் வாரத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடரின் முதல் வாரத்தை 229.06 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஆனால் 2021 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் 267.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையும் சுமார் 14% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது விளம்பரதாரர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர்கள் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விளம்பரங்களுக்கு 25% அதிகமாக பணம் செலுத்தியுள்ளனர். அப்படி இருக்கும் போது இம்முறை ஐபிஎல் தொடரின் டிஆர்பி மிகவும் குறைந்துள்ளது அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்