GT vs CSK Match Highlights: மீண்டும் மண்ணை கவ்விய சென்னை... ஒற்றை ஆளாய் வென்று கொடுத்த மில்லர்... GT வெற்றி!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் உத்தப்பா களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்தில் உத்தப்பா 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, பின்னால் வந்த மொயின் அலியும் ஜோசப் வீசிய 6 வது ஓவரில் 1 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
அதன் பிறகு ருதுராஜ் உடன் இணைந்த ராயுடு அதிரடிக்காட்ட, பார்ம் அவுட்டில் இருந்த ருதுராஜும் ரன் வேட்டையை தொடங்கினார். ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து இருவரும் சரவெடியாய் வெடிக்க, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ருதுராஜ் 37 பந்துகளில் 50 ரன்களை கடந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். மறுபுறம் அடித்து ஆடிய ராயுடு அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோசப் வீசிய 15 வது ஓவரில் 46 ரன்களில் அவுட் ஆனார்.
மேலும் அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ், யஷ் டாயல் வீசிய 17 வது ஓவரில் அடித்து ஆட முயற்சி செய்து 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கத்தில் 3 விக்கெட்களை எளிதாக பறிகொடுத்தது. தொடர்ந்து, தொடக்க வீரராக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விருத்திமான் சஹா 11 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார்.
இதையடுத்து, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களுடன் தடுமாறியது. பின்னர் களமிறங்கிய மில்லர் அதிரடி காட்டி, 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பிராவோ வீசிய 13 வது ஓவரில் ராகுல் திவாட்டியா 6 ரன்கள் அடித்து அவுட் ஆக, மில்லர் மறுபுறம் சரவெடி காட்டினார்.
Match 29. Gujarat Titans Won by 3 Wicket(s) https://t.co/FANQik7dZw #GTvCSK #TATAIPL #IPL2022
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
ஒரு கட்டத்தில் குஜராத் அணிக்கு 29 பந்துகளில் 61 ரன்கள் தேவையாக இருந்தது. தீக்ஷனா வீசிய 16 வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்தார். கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்றபோது, ஜார்டன் வீசிய முதல் 4 பந்தைகளை 3 சிக்ஸர், ஒரு பௌண்டரிக்கு அனுப்பினார் ரஷித் கான்.
தொடர்ந்து, பிராவோ வீசிய அடுத்த ஓவரில் ரஷித் ஒரு பௌண்டரி அடித்து 21 பந்துகளில் 40 ரன்களில் வெளியேறினார். பின்னால் வந்த அல்சாரி ஜோசப் அடுத்த பந்தே , ஜார்டனிடம் கேட்சானார். இறுதியில் குஜராத் அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது.
ஜார்டன் வீசிய கடைசி ஓவரில் மில்லர் அதிரடியாக ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி பறக்கவிட்டு, குஜராத் அணியை 3 வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்