IPL 2022, MI vs CSK: சிங்கம் சிங்கிளாதான் வரும்... வெறித்தனம் காட்டிய தோனி.. மிரண்டுபோன மும்பை!
IPL 2022, MI vs CSK: இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. மும்பை அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏழாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது
மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரை முகேஷ் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே மிட்-ஆனில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை அடுத்து, இஷான் கிஷனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 2-2 என்ற நிலையில் அடுத்து பிரவீஸ் அவுட்டாகவே பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.
பேட்டிங் ஆர்டரில் நான்காவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதானமாக ரன் சேர்த்தார். 32 ரன்கள் எடுத்திருந்தபோது சாண்ட்னர் பந்துவீச்சில் அவுட்டானார். இதனால், இளம் வீரர்கள் திலக் வர்மாவும், ஹிரித்திக் ஷோக்கீனும் ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
25 ரன்களுக்கு ஹிரித்திக் வெளியேறியதை அடுத்து பொல்லார்ட் களமிறங்கினார். பொல்லார்ட் இருந்தால், சவாலான ஸ்கோரை மும்பை அணி எட்டும் என எதிர்ப்பார்த்த நிலையில், தீக்ஷனா பந்துவீச்சில் 14 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.
இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. பவர்ப்ளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணிக்கு, உத்தப்பா, ராயுடு ஆகியோர் ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் நின்றார் தோனி. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்றபோது நிதானமாக ஆடிய தோனி, ஒரு சிக்சர்,பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி போட்டியை வென்றது. இதன் மூலம், இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. மும்பை அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏழாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்