IPL 2008 Recap: அதிக விலைக்கு ஏலம் போன தல தோனி; கோப்பையை தட்டித்தூக்கிய ராஜஸ்தான்; முதல் சீசன் க்ளியர் ரீவைண்ட்
IPL 2008 Recap: ஐபிஎல் தொடரின் முதல் சீசன் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இங்கு காணலாம்.
ஒட்டு மொத்த இந்திய நாடும் இந்த ஆண்டு கோடை காலத்தில் பரபரப்பின் உச்சகட்டத்தினையும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படும் ட்விஸ்ட்டுகளை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தல் மற்றும் ஐபிஎல் சீசன் 17ஐ எதிர்கொள்ள தயாராக உள்ளது. தேர்தலுக்கு எப்படி அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் தயாராகிக் கொண்டு இருக்கின்றதோ, ஐபிஎல் அணிகளும் பல வியூகங்களுடன் தங்களைத் தயார் செய்து வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொள்ளவுள்ளது.
இப்படியான நிலையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்கள் குறித்து ஒரு குட்டி ரீவைண்ட் இந்த தொகுப்பில் காணலாம். இதில் முதல் தொகுப்பாக ஐபிஎல் தொடரின் முதல் சீசன் குறித்து விரிவாக காணலாம்.
2008 ஐபிஎல்
ஐபிஎல் தொடரின் முதல் சீசனான இந்த சீசன் மீது உலக கிரிக்கெட் அரங்கமே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் என மொத்தம் 8 அணிகள் களமிறங்கின. இந்த முதல் சீசனின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 163 ரன்கள் சேர்த்தது. இதனை ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் 164 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் கோப்பையை வென்றது. இந்த சீசனில் லீக் போட்டிகளுடன் சேர்த்து மொத்தம் 59 போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், அரையிறுதில் வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன.
இந்த சீசனின் ஸ்டார் ப்ளேயர்கள்
இந்த சீசனின் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேனாக செயல்பட்ட ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பி பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த ஷான் மார்ஷ்க்கு வழங்கப்பட்டது. இவர் 11 போட்டிகளில் விளையாடி, 68.44 சராசரியுடனும் 139.68 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தம் 616 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் தொடக்க சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளருக்கு வழங்கப்படும் ஊதா நிறத் தொப்பி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய சோஹைல் தன்வீரருக்கு வழங்கப்பட்டது. சோஹைல் தன்வீர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். சோஹைல் தன்வீர் பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்றால் அது சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இதுவரை கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனிதான். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 6.52 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெயசூர்யா அதிக சிக்ஸர்கள் விளாசினார். இவர் 14 போட்டிகளில் விளையாடி 31 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார்.
இந்த சீசனில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்றால் அது அரஞ்சு தொப்பியை வென்ற பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் தான். இவர் மொத்தம் 59 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் இந்த சீசனில் மொத்தம் 6 சதங்கள் விளாசப்பட்டுள்ளது. தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக கொல்கத்தா அணியின் மெக்கல்லம் 158 ரன்கள் சேர்த்ததுதான். இவர் இந்த சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 73 பந்துகளில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் விளாசி 158 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
கவனம் ஈர்த்த போட்டிகள்
இந்த சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்த அணி தனது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் 2008ஆம் ஆண்டு சீசனில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையையும் பெற்றது.
அதேபோல் இந்த சீசனில் ஒரு போட்டியில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். அந்த அணி மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5.3 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.