ஐபிஎல்-ஐ அச்சுறுத்தும் காயங்கள்… இதுவரை மாற்று வீரர்களாக கொண்டுவரப்பட்ட வீரர்கள் லிஸ்ட் இதோ!
தொடருக்கு முன்னரே காயங்களால் விலகிய வீரர்கள் தொடங்கி, போட்டியின்போது காயப்பட்ட வீரர்கள் வரை லிஸ்ட் நீள்கிறது.
ஐபிஎல் 2023 சீசன் போட்டிகள் தொடங்கி 1 வாரம் முடியப்போகிறது. இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில் தோனி கம்பேக், இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல் என பல ஸ்வாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது இந்த ஒரு வாரம். ஆனால் ஒரே குறை இந்த ஐபிஎல் போட்டியில் காயம் ஒரு மிகப்பெரிய அரக்கனாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே வீரர்கள் காயத்தால் பின்னடைவை சந்தித்துள்ளன. பல வீரர்களுக்கு மாற்று வீரர்களையும் அணிகள் தேர்வு செய்துள்ளனர். தொடருக்கு முன்னரே காயங்களால் விலகிய வீரர்கள் தொடங்கி, போட்டியின்போது காயப்பட்ட வீரர்கள் வரை லிஸ்ட் நீள்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் போட்டியின்போது காயமடையும் வீரரால் பெரிய பாதிப்பில்லாமல் அணிகள் தடுத்து விடுகின்றனர். ஆனால் மறுபுறம் இம்பாக்ட் பிளேயர் விதியால் அணி முழுவதும் பேட்ஸ்மேன்களாகவும், ஏழெட்டு பந்துவீச்சு ஆப்ஷன்கள் கிடைப்பதாகவும், கொஞ்சம் சலிப்பு தட்டுகிறதென்ற பேச்சும் உள்ளது. ஆனால் காயப்பட்ட வீரருக்கு மாற்றாக கொண்டு வருவது ப்ளஸ்தான் என்கின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தொடரில் இருந்தே வெளியேறிய வீரர்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட வீரர்கள் யார்யார்? முழு விவரம் இதோ.
ரிஷப் பண்ட் - அபிஷேக் போரெல்
கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட் இவ்வருடம் முழுவதும் கிரிக்கெட் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் தூணான அவர் இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை தேடியபோது அவர்களுக்கு கிடைத்தவர்தான் அபிஷேக் போரெல். முதல் போட்டியில் சர்ஃபராஸ் கான் கீப்பிங் செய்திருந்தாலும், கொஞ்சம் சோதப்பியதால் இரண்டாவது போட்டியில் போரெலை பயன்படுத்தினர். இப்போதும் பண்ட் அளவிற்கு வராது என்ற குறையை ரசிகர்கள் கூறிக்கொண்டுதான் உள்ளனர்.
பும்ரா - சந்தீப் வாரியர்
பல நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, ஐபிஎல் தொடருக்கு முன் அறுவை சிகிச்சை செய்ததால் இனி உலகக்கோப்பைக்கே வருவாரா என்ற சந்தேகத்தின் மத்தியில் சந்தீப் வாரியரை புக் செய்தது மும்பை அணி. ஆனால் இதுவரை அவரை களத்தில் பயன்படுத்தவில்லை.
முகேஷ் சவுத்திரி - ஆகாஷ் சிங்
சென்னை அணிக்கு கடந்த வருடம் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார். ஆனால் காயத்தால் விளகியதால் ஆகாஷ் சிங்-ஐ ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே அணி.
பிரசித் கிருஷ்ணா - சந்தீப் சர்மா
ராஜஸ்தான் அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா போட்டிக்கு முன்னரே காயத்தால் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மூத்த வீரர், ஏலத்தில் விற்கப்படாத சந்தீப் ஷர்மா எடுக்கப்பட்டார்.
ஜானி பேர்ஸ்டோ - மேத்யூ ஷார்ட்
பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல நாட்களாக காயத்தில் இருந்து தற்போது முழுமையாக தேறாத காரணத்தால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
வில் ஜாக்ஸ் - மிச்சேல் பிரேஸ்வெல்
ஆர்சிபி அணி மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த வீரர் வில் ஜாக்ஸ் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் மிச்சேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டு அணிக்கு நல்ல பங்களிப்பையும் வழங்கி வருகிறார்.
கைல் ஜேமீசன் - சிசந்தா மகலா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய இரு போட்டிகளிலுமே பந்துவீச்சில் பிரச்சனை இருந்துள்ளது. தீபக் சஹர் பழைய ஃபார்மை கொண்டு வராததாலும், முகேஷ் சவுத்ரி இல்லாததாலும் திணறி வரும் அணி கைல் ஜேமீசனை ஏலத்தில் எடுத்திருந்தது. இந்த மூவரையும் பார்த்து நல்ல பவுலிங் அட்டாக் உள்ள அணி என்று பலரால் போற்றப்பட்ட நிலையில், முகேஷை தொடசர்ந்து ஜேமீசனும் காயமடைய அணி பேட்டிங்கால் பிழைத்து வருகிறது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள தென்னாப்ரிக்காவின் சிசந்தா மகலா இதுவரை களமிறக்கப்படவில்லை.
ஷகிப் அல் ஹசன் - ஜேசன் ராய்
ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணி, அயர்லாந்துடன் ஆடும் தொடருக்காக தேசிய அணியில் விளையாடுவதால் ஐபிஎல் போட்டிகளுக்கு வரவியலாத சூழல் இருந்தது. இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறியதால், ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக ஒரு வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்து ஜேசன் ராயை எடுத்துள்ளது கேகேஆர் அணி. ஆர்சிபி உடனான இன்றைய போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
கேன் வில்லியம்சன் - டாசன் ஷாணகா
சிஎஸ்கே உடனான தொடரின் முதல் ஆட்டத்தின்போது குஜராத் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்து முழங்காலில் காயமடைந்த கேன் வில்லியம்சன்னுக்கு பதிலாக டாசன் ஷாணகா, களமிரங்குகிறார். இலங்கை அணியின் அதிரடி வீரரான இவர் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனபோது பலர் ஆச்சர்யத்திற்கு உள்ளாகினர், தற்போது ஒருவழியாக ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்தது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.