(Source: ECI/ABP News/ABP Majha)
"நல்லாதான் விளையாடுனேன்; தோனியால் நான் குழம்பிட்டேன்": அனுபவத்தை பகிர்ந்த இஷான் கிஷன்
ஒரு ஸ்பின் பவுலர் போடும் ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஆடினால் எப்படி தேர்ட் மேனில் கேட்ச் ஆக முடியும் என்று இன்றுவரை எனக்கு விளங்கவில்லை.
ஐபிஎல் தொடங்கியது முதல் 14ஆவது சீசன்வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, திடீரென்று 15ஆவது சீசன் துவங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் சிஎஸ்கே முதல் மூன்று போட்டிகளிலும் கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்று, சொதப்பியது. இருப்பினும் தோனியின் ஆட்டம் ரசிகர்கள் பலரை ஆறுதல் படுத்தி வருகிறது. தோனி கிரிக்கெட் திறன்களை உடல்ரீதியாக மட்டுமின்றி அறிவு ரீதியாக அதிகமாக அணுகிய ஒருவர். அவர் சிந்தனை மூலமாகவே இந்திய அணியும் சிஎஸ்கே அணியும் கோப்பையை வாங்கி குவித்துள்ளது என்பது எல்லோரும் அறிந்தது. குறிப்பாக ஃபீல்டிங் நேரத்தில் அவர் செய்யும் வேலைகள் பல கிரிக்கெட் அறிஞர்களையே மலைக்க வைத்துள்ளது.
கிரிக்கெட்டில் ஒருவரின் பந்தைக் கண்டு, மட்டை வீச்சை கண்டு எதிரணியினர் அஞ்சுவது வழக்கம். ஆனால் ஒருவரது மூளையை கண்டு அஞ்சுகிறார்கள் என்றால் அது தோனிதான். அதற்காக அவர் செய்த செய்கைகளும் அப்படி அம்புபோல் பாய்ந்திருக்கின்றன எதிரணியினர் நெஞ்சில். சமீபத்தில் அதனை வெளிப்படையாக ஒரு இந்திய வீரர் ஒப்புக்கொண்டு ஒரு ஆட்டத்தில் அவர் தோனியின் மூளையால் வீழ்ந்ததை விளக்கி உள்ளார்.
அவர்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான். அவர் பேசுகையில், "கடந்த ஐபிஎல்-இல் ஒருமுறை சிஎஸ்கே-வுக்கு எதிராக ஆடிய போது, அவர்களது பவுலர்களை நன்றாக எதிர்கொண்டு, பவுண்டரி, சிக்ஸ் என்று அடித்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தாஹிர் பாய் பந்து வீசிக்கொண்டிருந்தார். தோனி பாய் சென்று அவரிடம் பேசினார். அவர் என்ன பேசினார் என்று எனக்கு சரியாக கேட்கவில்லை.
நான் என்ன சொல்லியிருப்பார், அடுத்த பந்து எப்படி வரப்போகிறது என்று சிந்தித்து கொண்டு இருந்தேன். அப்போது அவர் போட்ட பந்து ஒரு ஷார்ட் பிட்ச் பந்து. அதனை ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஆட முயற்சித்தேன். ஆனால் தேர்ட் மேனில் கேட்ச் ஆனேன். நான் இன்றுவரை சிந்தித்து வருகிறேன். ஒரு ஸ்பின் பவுலர் போடும் ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஆடினால் எப்படி தேர்ட் மேனில் கேட்ச் ஆக முடியும் என்று இன்றுவரை எனக்கு விளங்கவில்லை. தோனி ஒரு விக்கெட் கீப்பராக எனக்கு ஒரு பெரிய ட்ரிக் ஒன்றை கற்றுத் தந்திருக்கிறார். நம் கைகள் பந்தைப் பிடிக்க நேராக இருக்கும், ஆனால் பந்து பெட்டில் உரசுகிறது என்று நாம் அறிந்தவுடன் நம் கைகளை நகர்த்துவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. என்ன ஆனாலும் கை, மணிக்கட்டு ஆகியவை இவ்வளவுதான் நகர வேண்டும் என்று செய்து காண்பித்தார். அதனை பின்பற்றினால் எட்ஜில் பட்டுவரும் பந்து கொஞ்சம் நன்றாகவே பட்டு அதிக அளவில் திசை திரும்பினாலும் பிடித்து விடலாம் என்று சொல்லித்தந்தார்" என்று கூறினார்.