IPL 2021: ப்ளே ஆப் சுற்று: எந்த அணி தகுதி பெறும்? எந்த அணி தகுதி பெறாது? முழு விவரம் இதோ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மற்ற அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற துடித்து வருகிறது.
IPL 2021 PLAY OFF : ஐ.பி.எல். 2021ம் ஆண்டுக்கான தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி முதலாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மற்ற அணிகளின் நிலை என்ன என்பதை கீழே காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
11 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த தொடரில் முதல் அணியாக வெளியேறிய சென்னை, தனது பழைய பார்முடன் மீண்டும் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் :
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 11 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளில் தோல்வியடைந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாலும், 0.562 என்று ரன் ரேட் விகிதம் உள்ளதாலும் ஏற்கனவே டெல்லி அடுத்த சுற்றுக்கு செல்வது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது. அடுத்து ஆட உள்ள 3 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்றால்கூட அதிகாரப்பூர்வமாக டெல்லி உள்ளே சென்றுவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
விராட்கோலி கடைசியாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் இந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் தோல்வியடைந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி அடுத்து பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இதில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால்கூட பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி பெற்று 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. ரன்ரேட் ப்ளசில் இருப்பதால் மும்பையை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா 4வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி அடுத்து தான் ஆட உள்ள பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இரண்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
மும்பை இந்தியன்ஸ் :
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடர் தொடங்கியது முதலே சறுக்கி வருகிறது. கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் கொல்கத்தாவுடன் சமமாக உள்ளது. ஆனால், ரன்ரேட் மைனசில் இருப்பதால் தற்போது 5வது இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது.
மும்பை அணி அடுத்து தான் எதிர்த்து ஆடும் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளையும் நல்ல ரன்ரேட் விகிதத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்போதுதான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
பஞ்சாப் கிங்ஸ் :
புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி அடுத்து தான் ஆட உள்ள மூன்று போட்டிகளிலும் மிகப்பெரிய ரன் வித்தியாசம் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால், பஞ்சாப் தன்னுடைய அடுத்த மூன்று ஆட்டங்களையும் பலம்மிகுந்த சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளை சந்திக்க உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஐ.பி.எல். கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய ராஜஸ்தான் அணி அடுத்து எந்தவொரு தொடரிலும் சோபிக்கவில்லை. 11 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணி தான் அடுத்த ஆட உள்ள மூன்று போட்டிகளும் வாழ்வா? சாவா? என்ற சூழலே ஆகும். கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளையும் தோற்கடித்து, பிற அணிகளின் வெற்றி தோல்விகள் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமைந்தால் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
சென்னை அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் தோற்றதன் மூலம் நடப்பு தொடரில் முதல் அணியாக ஹைதராபாத் வெளியேறியுள்ளது. 11 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹைதரபாத் அணி அடுத்து கொல்கத்தா, பெங்களூர், மும்பை அணிகளை எதிர்த்து ஆட உள்ளது.
Gayle Leave in IPL 2021: ஐ.பி.எல். தொடரில் இருந்து திடீரென விலகிய கிறிஸ் கெயில்... காரணம் இது தான்!