Gayle Leave in IPL 2021: ஐ.பி.எல். தொடரில் இருந்து திடீரென விலகிய கிறிஸ் கெயில்... காரணம் இது தான்!
உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக தன்னை மனதளவில் தயார் செய்வதற்காக கிறிஸ் கெயில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே அனைத்து அணியைச் சேர்ந்த ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களில் எப்போதும் முதன்மையானவர் கிறிஸ் கெயில். பெங்களூர் அணிக்காக ராஜ்ஜியம் செய்து வந்த கிறிஸ் கெயில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் ஆடி வருகிறார்.
இந்த நிலையில், உலககோப்பை போட்டித்தொடர் வரும் 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் நேற்று ஐ.பி.எல். 2021 தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “ கடந்த சில மாதங்களாக நான் மேற்கிந்திய தீவுகள் அணி ஆடிய கிரிக்கெட் போட்டிகளுக்காகவும், கரிபீயன் பிரிமீயர் லீக் போட்டிகளுக்காகவும். தற்போது ஐ.பி.எல். தொடருக்காகவும் பயோ – பபுள் விதியின் கீழ் இருந்து வருகிறேன். நான் மனதளவில் எனக்கு புத்துணர்ச்சி ஊட்ட விரும்புகிறேன். அது உலககோப்பை டி20 தொடரில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்று விரும்புகிறேன். இதனால், துபாயில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ளேன். எனக்கு ஓய்வு அளித்த பஞ்சாப் கிங்ஸ் அணியினருக்கு எனது நன்றி. எனது வாழ்த்துக்கள் அணி வீரர்களுக்கு எப்போதும் உள்ளது. வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆட வாழ்த்துக்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த திடீர் அறிவிப்பால் பஞ்சாப் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். கிறிஸ் கெயிலின் அறிவிப்பு குறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில்கும்ப்ளே கூறியிருப்பதாவது,”நான் கிறிஸ் கெயிலுக்கு எதிராக ஆடியுள்ளேன். அவருக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளேன். அவரை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். அவர் மிகச்சிறந்த தொழில்முறை வீரர். அவரது முடிவை அணி நிர்வாகம் மதிக்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலககோப்பை டி20 தொடரில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் பொல்லார்ட் தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் பூரன், ஹெட்மயர், லிவீஸ் ஆகிய இளம் வீரர்களுடன் கிறிஸ் கெயிலும் களமிறங்குகிறார். 42 வயதான கிறிஸ் கெயில் 142 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 4965 ரன்கள் அடித்துள்ளார்.
தனிநபர் அதிகபட்சமாக 175 ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இதுவரை 357 சிக்ஸர்கள் அடித்து யாரும் நெருங்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டிவிலியர்ஸ் கூட 247 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வடிவிலும் சேர்த்து 1000 சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர் என்ற பெருமையும் கிறிஸ் கெயிலுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வயது மற்றும் பார்ம் இன்மை காரணமாக பெங்களூர் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த கிறிஸ் கெயிலை அந்த அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழற்றிவிட்டது. பின்னர், கடந்த ஓரிரு தொடர்களாக பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் ஆடி வருகிறார்.