Ganguly on IPL 2022: அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே ஐபிஎல் தொடரா? கங்குலி சொன்ன பதில் என்ன தெரியுமா?
ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்துவது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022ஆம் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது உள்ள 8 அணிகள் தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை கடந்த 30ஆம் தேதி அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிதாக உள்ள இரண்டு அணிகள் ஏலத்திற்கு முன்பாக வீரர்களை எடுக்க தயாராகி வருகின்றன. மேலும் ஜனவரி மாதம் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், “கடந்த முறை இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரை கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் நிறுத்தினோம். அதன்பின்னர் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக யுஏஇயில் நடத்தி முடித்தோம். கடந்த முறையில் இந்தியாவில் உள்ளூர் போட்டிகளிலும் கொரோனா பாதிப்பு காரணமாக தடைப்பட்டு இருந்தன.
ஆனால் இம்முறை உள்ளூர் போட்டிகள் எந்தவித தடையையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. சையித் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே என அனைத்து தொடர்களிலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் ரஞ்சி கோப்பை தொடரும் தொடங்க உள்ளது. இந்தத் தொடர்கள் எதிலும் தற்போது வரை பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை.
ஆகவே அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எந்தவித தடையும் இருக்காது. மேலும் தற்போது நாம் இந்தியாவிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நியூசிலாந்து தொடர் வெற்றிகரமாக முடிந்தது. அதன்பின்னர் நமது அணி தென்னாப்பிரிக்கா செல்கிறது. எனவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த எந்தவித தடையும் வராது” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தொடர்பாகவும் இந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி,"என்னுடைய நண்பர் டிராவிட்டிற்கு எனது வாழ்த்துகள். பயிற்சியாளராக அவர் தன்னுடைய பணியை சிறப்பாக தொடங்கியுள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வீரர்களின் பயிற்சி முடிந்த பிறகு பந்துகள், கோன்கள், பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றை டிராவிட் எடுத்து வந்தார். அதை நான் கேள்வி பட்டேன். அதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர் அந்த மாதிரியான மனிதர் தான். அவருடைய இயல்பு எப்போதும் மாறாது" எனக் கூறியுள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:ஜமி எப்போதும் அப்படித்தான்.. டிராவிட் செய்த மாஸ் சம்பவம்.. பாராட்டிய கங்குலி