RCB New Captain : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டுப்ளிசிஸ் நியமனம்...! அதிரடி அறிவிப்பு..!
டாடா ஐ.பி.எல். 2022ம் ஆண்டுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பாப் டுப்ளிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகிய பிறகு, அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி பெரியளவில் எழுந்தது. டுப்ளிசிஸா? மேக்ஸ்வெல்லா? என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், புதிய கேப்டனாக டுப்ளிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக பாப் டுப்ளிசிஸ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் அணியின் வழக்கமான நிறமான சிவப்பு நிறமே இல்லாமல் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த புதிய சீருடையை பெங்களூர் அணிக்காக அறிமுகப்படுத்தினர்.
The Leader of the Pride is here!
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
Captain of RCB, @faf1307! 🔥#PlayBold #RCBCaptain #RCBUnbox #ForOur12thMan #UnboxTheBold pic.twitter.com/UfmrHBrZcb
ஐ.பி.எல். தொடர்களில் எப்போதும் முக்கிய அணியாக வலம் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி. ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதலே ஆடி வரும் பெங்களூர் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே விராட்கோலி கேப்டனாக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்தாண்டு தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரது அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், விராட்கோலிக்கு பதிலாக புதிய கேப்டனாக டுப்ளிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில்தான் டுப்ளிசிஸ் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். டுப்ளிசிஸ் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்ற தூணாக விளங்கினார். கடந்த சீசனில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியவர். டுப்ளிசிஸ் ஏற்கனவே தென்னாப்பிரக்க அணிக்காக உலககோப்பை தொடரில் கேப்டனாக ஆடியவர்.
பெங்களூர் அணிக்காக இத்தனை ஆண்டுகள் தூணாக இருந்து ஆடிய 360 டிகிரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவிலியர்சும் தென்னாப்பிரக்காவைச் சேர்ந்தவர், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய கேப்டன் டுப்ளிசிஸிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டுப்ளிசிஸ் இதுவரை 100 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 935 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 22 அரைசதங்கள அடங்கும். அதிகபட்சமாக 96 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 50 டி20 போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 1,528 ரன்களை குவித்துள்ளார். 143 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்களுடன் 5 ஆயிரத்து 507 ரன்களை குவித்துள்ளார். 69 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 21 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 163 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்