CSK Captain Dhoni: மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால், தோனியை கேப்டனாக அறிவித்தது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
ஐபிஎல் தொடரில் சொதப்பிவந்த சிஎஸ்கே அணி
ஐபிஎல் தொடர் என்றாலே, ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு அணி சிஎஸ்கே. அந்த எதிர்பார்ப்பு, தோனி என்ற ஒரு அசகாய சூரனுக்காகத்தான். இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில், மோசமான நிலையில் தற்போது உள்ளது சிஎஸ்கே. மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனது முதல் போட்டியில், மும்பை அணிக்க எதிராக வெற்றியை சுவைத்த சிஎஸ்கே அணி, அதன் பின்னர் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது.
ஆர்சிபி அணி உடனான தனது இரண்டாவது போட்டியில், 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. அதன்பின்னர், ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதற்கு அடுத்த போட்டி, அதாவது 4-வது போட்டியில், டெல்லி அணியுடன் மோதிய நிலையில், 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று சொதப்பியது சிஎஸ்கே அணி. அதற்கு அடுத்ததாக, பஞ்சாப் உடனான தனது 5-வது போட்டியில், வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சிஎஸ்கே.
இப்படி, 4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து, வெறும் 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த போட்டியில், காயம் காரணமாக ருதுராஜ் விளையாட மாட்டார் என்றும், தோனி மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், கடந்த போட்டியில் ருதுராஜ் விளையாடினார்.
மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்ட தோனி
இந்த நிலையில், தற்போது காயம் காரணமாக ருதுராஜ் விலகுவதால், இந்த ஐபிஎல் தொடரில் தோனி கேப்டனாக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிஎஸ்கே அணி, தோனி மீண்டும் கேப்டனானதால், இனியாவது வெற்றிப் பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்
இந்நிலையில், நாளை(11.04.25) சென்னை சேப்பாக்கத்தில், கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இந்த தொடரில், தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்கும் முதல் போட்டி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்... பொறுத்திருந்து பார்ப்போம்...

