CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் போட்டியில், மழை குறுக்கிடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
CSK Vs RCB, IPL 2024: சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மழை குறுக்கிட்டடு, ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூர் அணிக்கான வெற்றி வரம்புகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூர் மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 67 லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணி யார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மழை குறுக்கிட வாய்ப்பு:
சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேநேரம், பெங்களூர் அணி குறிப்பிட்ட வரம்புகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை பெங்களூர் அணி வெற்றி பெற்றும், அந்த வரம்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டால், சென்னை அணி தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனிட்டையே, இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பொழிய அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அப்படி போட்டி கைவிடப்பட்டாலும், சென்னை அணி தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றால், பெங்களூர் அணி எப்படி வெற்றி பெற வேண்டும் என சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அப்படி நடந்தால் மட்டுமே பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வரம்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால்?
- போட்டி 20 ஓவர்கள் நடைபெற்று முதலில் பேட்டிங் செய்யும் பெங்களூர் அணி 200 ரன்களை குவித்தால், சென்னை அணியை 182 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
- மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால், 170 ரன்களை சேர்த்து சென்னை அணியை 152 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
- மழையால் போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால், 130 ரன்களை சேர்த்து சென்னை அணியை 112 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
- மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால், 80 ரன்களை சேர்த்து சென்னை அணியை 62 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால்?
- போட்டி 20 ஓவர்கள் நடைபெற்று சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், பெங்களூர் அணி அதனை 18.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்
- மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 13.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.
- மழையால் போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 8.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.
- மழையால் போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து, 81 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பெங்களூர் அணி அதனை 3.1 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
இன்று பெங்களூரு வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் பெங்களூருவில் மழை பொழிய 90 சதவிகிதம் வாய்ப்புள்ளது. சின்னசுவாமி மைதானத்தின் வடிகால் வசதிகள், போட்டி நடைபெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.