IPL PBKS WIN : சென்னை ஹாட்ரிக் தோல்வி...! பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
Chennai Super Kings vs Punjab Kings : பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
IPL 2022, Match, CSK vs PBKS: மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி அரைசதம், ஷிகர் தவான் மற்றும் ஜிதேஷ் சர்மாவின் அதிரடியால் 180 ரன்களை குவித்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர் ருதுராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலே ராபின் உத்தப்பா 10 ரன்களில் அவுட்டானர். அவர் ஆட்டமிழந்த பிறகு அம்பத்தி ராயுடு – ஆல்ரவுண்டர் மொயின் அலி ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து சென்னை ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆல்ரவுண்டர் மொயின் அலி இளம் வீரர் வைபவ் அரோரா பந்தில் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து கேப்டன் ஜடேஜா களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவரும் 3 பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில் அர்ஷ்தீப்சிங் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து போல்டாகி வெளியேறினார். சென்னை அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 27 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அம்பத்தி ராயுடு பொறுப்புடன் ஆடி சென்னையை மீட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் 13 ரன்களில் ஓடீன்ஸ்மித் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். சென்னை அணி 37 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், முன்னாள் கேப்டன் தோனியும், ஷிவம் துபேவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இதனால், சென்னை அணி 10 ஓவர்களில் 53 ரன்களை எட்டியது. 10வது ஓவருக்கு பிறகு ஷிவம்துபே அதிரடியாக ஆடத்தொடங்கினார்.
குறிப்பாக, தோனி நல்ல ஒத்துழைப்பு அளிக்க ஷிவம் துபே அதிரடியாக ஆடத்தொடங்கினார். 26 பந்துகளில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷிவம் துபே லிவிங்ஸ்டன் வீசிய 15வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே புதிய பேட்ஸ்மேன் ப்ராவோ லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், சென்னை அணி 98 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
சென்னையின் வெற்றிக்கு 30 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்டது. ப்ரெட்ரியஸ் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய சிறிது நேரத்திலே ப்ரெட்ரியஸ் ராகுல் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 64 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதும் தோனி அதிரடியாக ஆடத்தொடங்கினார். ஆனால், தோனி 9வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 28 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்களுடன் ராகுல் சஹார் பந்தில் அவுட்டானார். கடைசியில் சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வி ஆகும்.
பஞ்சாபில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும், வைபவ் மற்றும் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப்சிங், ஓடீன் ஸ்மித் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மேலும், ஷிகர் தவான் மற்றும் ஜிதேஷ்சர்மாவும் அதிரடியாக ஆடினர்.
இந்த வெற்றி மூலம் சென்னை 9வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்