Bottom of the table in IPL: முதல் முறையாக துண்டை தவறவிட்ட சிஎஸ்கே - அதிக முறை கடைசி இடம் பிடித்த அணி - RCB, MI?
Bottom of the table in IPL: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Bottom of the table in IPL: ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றின் முடிவில் அதிகமுறை கடைசி இடம் பிடித்த அணி குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
துண்டை தவறவிட்ட சென்னை:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மற்ற 6 அணிகளும் லீக் சுற்றை விட்டு வெளியேறியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தாண்டி முன்னேற முடியவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. 16 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்று, 10 முறை இறுதிப்போட்டியில் களம் கண்டு 5 முறை கோப்பைகளை வென்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு 9வது இடத்தை பிடித்து இருந்ததே, லீக் சுற்றில் சென்னை அணியின் மோசமான செயல்பாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் மோசமான சாதனை:
புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடிப்பது சென்னை அணிக்கு மட்டுமே முதல்முறை. ஆனால், சில அணிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கடைசி இடத்தை பிடித்து சொதப்பியுள்ளன. அதில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 5 கோப்பைகளை வென்ற மும்பை அணியும், நட்சத்திர வீரர் விராட் கோலி அடங்கிய பெங்களூரு அணியும் கூட அடங்கும். அதேநேரம், வேற எந்த அணியை காட்டிலும் அதிகபட்சமாக, டெல்லி அணி லீக் சுற்றின் முடிவில் நான்குமுறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, 2011, 2013, 2014 மற்றும் 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணி கடைசி இடம்பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சாப் அணி மூன்று முறையும், பெங்களூரு மற்றும் மும்பை அணி தலா இரண்டு முறையும் புள்ளிப்பட்டியலில் கடைசி பிடித்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த அணிகள்:
- 2008 - டெக்கன் சார்ஜர்ஸ்
- 2009 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2010 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
- 2011 - டெல்லி டேர்டெவில்ஸ்
- 2012 - புனே வாரியர்ஸ் இந்தியா
- 2013 - டெல்லி டேர்டெவில்ஸ்
- 2014 - டெல்லி டேர்டெவில்ஸ்
- 2015 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
- 2016 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
- 2017 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- 2018 - டெல்லி டேர்டெவில்ஸ்
- 2019 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- 2020 - ராஜஸ்தான் ராயல்ஸ்
- 2021 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- 2022 - மும்பை இந்தியன்ஸ்
- 2023 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- 2024 - மும்பை இந்தியன்ஸ்
- 2025 - சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தாண்டு சென்னை அணி கடைசி இடம் பிடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 2008ம் ஆண்டில் அறிமுகமான 8 அணிகளும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது கடைசி இடத்தை பிடித்துள்ளன. அதேநேரம், கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமாக நான்கு சீசன்களில் விளையாடியுள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ஒருமுறை கூட புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















