"கேப்டன் என்பதால், யார்மீதும் என் எதிர்பார்ப்பை திணிக்கமுடியாது," சன்ரைசர்ஸ் வெளியிட்ட வீடியோவில் மார்க்கரம்!
"இன்னும் நாங்கள் நம்பிக்கையை விடவில்லை. அணி வீரர்கள் அனைவர் மீதும் எனது எதிர்பார்ப்புகளை திணிக்க முடியாது. உள்ளபடியே எல்லோரும் நன்றாக ஆடுவதற்காக மட்டும்தான் முயற்சி செய்து வருகிறார்கள்"
ஐபிஎல் 2023 சீசன் பரபரப்பாக நடந்து வரும் சூழலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்ப கட்டத்தில் வெற்றியைப் பெற திணறி வந்தது. சில போட்டிகள் கழித்துதான் கேப்டன் மார்க்கரம் ஆட வந்தார். ஆனால் அவர் வந்தபின்னும் நிலமை அப்படியே இருந்தது. முதல் பாதியில் ஐந்து தோல்விகளுடன் இருந்த அந்த அணி, கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் இருந்தது. ஒருவழியாக நேற்றைய போட்டியில் டெல்லி அணியை வென்று இரண்டு இடங்கள் முன்னேறி வந்துள்ளது.
சன்ரைசர்ஸ் வெளியிட்ட வீடியோ
அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறித்த பேச்சு அதிகமான நிலையில், டெல்லி போட்டிக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பேசிய அணியின் கேப்டன் எய்டன் மார்க்கரம், "அணி வீரர்கள் இன்னும் நல்ல நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள். யாரும் தன்னம்பிக்கையை விட்டுவிடவில்லை. இந்த நிலையில் இருப்பதற்கு காரணம், முயற்சி குறைபாடு ஒன்றும் இல்லை,' என்று கூறினார்.
வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்
மேலும் பேசிய அவர், "இங்கே வீரர்கள் கடுமையா உழைக்கிறார்கள், களத்திற்கு பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது, அவர்களை நிரூபிக்க வேண்டும், அணியை அடுத்த நிலைக்கு கொண்டு போக வேண்டும் என்று பெரிய முயற்சி எல்லாரிடமும் உள்ளது. தற்போதைக்கு நாங்க கவனம் செலுத்துவது எல்லா வீரர்களையும் சுதந்திரமாக விடுவதுதான். அப்போதுதான் அவர்களிடம் இருந்து நல்ல எதிர்வினை கிடைக்கும் என்று நம்புகிறோம். கேப்டனாக நிறைய பொறுப்பு உள்ளது, ஆனால் நாம் நினைத்தது போல் எல்லாம் நடந்துவிடாது," என்றார்.
வீரர்களை சுதந்திரமாக விட வேண்டும்
திட்டங்கள் குறித்து பேசிய அவர், "பிரச்சனைகளை களைந்து, விஷயங்களை மாற்ற முயற்சிக்க வேண்டும், தொடர்ச்சியான வெற்றிகளை பெற வேண்டும், அவவளவுதான் இப்போதைய நோக்கம். முன்னரே கூறியது போல, அணி வீரர்ககை சுதந்திரமாக விடுவது தான் நல்ல தீர்வை கொடுக்கும். அவர்கள் மீது அழுத்தம் தரக்கூடாது. அதன் மூலம் அவர்களும் ஒரு நம்பிக்கையான விஷயத்தை உணர்வார்கள். அது ஒரு அணியாக நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்," என்றார்.
"We are still confident as a team" 👊
— SunRisers Hyderabad (@SunRisers) April 29, 2023
🎥 Ahead of the #DCvSRH clash, Skipper Markram is positive about turning things around 🧡 pic.twitter.com/OTtlgMz7RG
எல்லோர் மீதும் எதிர்பார்ப்புகளை திணிக்கமுடியாது
மேலும் பேசிய அவர், "அதனால் அடுத்த சில வாரங்களை எதிர்நோக்கியுள்ளோம், எப்படி செல்கிறதென்று பார்க்கலாம். இன்னும் நாங்கள் ஒரு அணியாக நம்பிக்கையை விட்டுவிடவில்லை. எங்கள் ரசிகர்களுக்காக நல்ல விஷயங்களை செய்ய காத்திருக்கிறோம். அணி வீரர்கள் அனைவர் மீதும் எனது எதிர்பார்ப்புகளை திணிக்க முடியாது. உள்ளபடியே எல்லோரும் நன்றாக ஆடுவதற்காக மட்டும்தான் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களை சுதந்திரமாக விடுவதுதான் என்னைப்பொருத்த வரையில் சிறந்தது. இது எங்களை நல்ல நிலைக்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறோம், "என்று கூறினார்.