அசத்திய தமிழ்நாட்டு ஜோடி… டெல்லி பந்துவீச்சை நிலைகுலைய செய்த சாய் சுதர்சன் - விஜய் சங்கர் ஜோடி!
டைட்டன்ஸ் காலி என்று நினைத்த சமயத்தில், இனி மில்லர் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த சமயத்தில் வந்து நின்றார்கள் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள்.
சென்னை அணியில் தமிழக வீரர்கள் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட மற்ற எல்லா அணிகளிலுமே தமிழ்நாட்டு வீரர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றியாளர்களாகவும் திகழ்கிறார்கள். நடராஜன், அஸ்வின் தொடங்கி ஷாருக்கான் வரை வெவ்வேறு அணிகளில் பிரகாசித்து வருகின்றனர். குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி தமிழ்நாட்டு வீரர்களை கொண்டாடும் அணியாக உள்ளது. விஜய் ஷங்கர், சாய் சுதர்சன், சாய் கிஷோர் என மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் கொண்ட அணியான குஜராத்தில் சென்ற ஆண்டு கோப்பையை வென்றபோதும் இவர்கள் இடம்பெற்று இருந்தனர். ஏற்கனவே விஜய் ஷங்கர் இந்திய அணிக்கு அடியவர் என்பதால் இதில் அனுபவம் அதிகம் பெற்றவர் அவர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வந்த சாய் சுதர்சன் முக்கியமான ரன் சேஸின்போது நிதானத்தை இழக்காமல், தனது உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறவும் செய்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள்
வில்லியம்சன் காயத்தால் வெளியேறிய நிலையில் அவரது பாத்திரத்தை ஏற்ற சாய் சுதர்சன் தனது முதிர்ச்சியை காட்டி உள்ளார். கிட்டத்தட்ட குஜராத் அணியை தொடக்கத்தில் அசைத்து பார்த்துவிட்டனர் டெல்லி பந்துவீச்சாளர்கள். பவர்ப்ளேவிலேயே மூன்று தூண்களை சாய்த்துவிட்ட டெல்லி அணி ஏறுமுகம் கண்டது. இதே போல நெருப்பாக பந்து வீசினால் குஜராத் டைட்டன்ஸ் காலி என்று நினைத்த சமயத்தில், இனி மில்லர் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த சமயத்தில் வந்து நின்றார்கள் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள்.
நேர்த்தியான நிதானமான ஆட்டம்
விக்கெட் விழுந்திருந்தாலும் பவர்பிளேயில் 54 ரன்கள் குவித்திருந்ததால், ரன் ரேட் அழுத்தம் இல்லை என்று உணர்ந்து அதற்கு ஏற்ப நிதானமாக, அடிக்க வேண்டிய பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்து ரன்ரேட்டும் குறையாமல் ஆட்டத்தை கடத்தி சென்றனர் இருவரும். கிட்டத்தட்ட 7 ஓவர்கள் ஆடிய இந்த ஜோடி 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்தது. கேட்க எளிதாக தெரிந்தாலும் இக்கட்டான சூழலில், ஒரு சாதாரண இலக்கை நேர்த்தியாக சேஸ் செய்யத் தேவையான முதிர்ச்சி மனநிலையை இருவருமே கொண்டிருந்தனர்.
தேர்ந்த ஷாட்கள்
டி20, ஐபிஎல் என்பதால் வானவேடிக்கைகள் காட்ட வேண்டும் என்ற எந்த ஒரு அழுத்தத்தையும் மனதில் கொள்ளாமல், தேர்ந்த கிரிக்கெட்டிங் ஷாட்களை இருவரும் அடித்தது அவர்கள் புரிதலை காண்பித்தது. கிட்டத்தட்ட இழந்த நம்பிக்கையை இந்த ஜோடி மீட்டெடுத்து. விஜய் ஷங்கர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன், 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மில்லருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் ஆட்டத்தை முடித்தார். 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்த அவர் தேர்ந்தெடுத்த ஷாட்களை அனைத்துமே கிளாசிக் ஷாட்கள். ஸ்கூப், ஃப்ளிக், அப்பர் கட் என எல்லா திசையிலும் பந்தை விரட்டியது பலரை ஈர்த்தது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு தமிழ்நாட்டு வீரர்கள் ஐபிஎல் 2023 இல் தங்கள் முத்திரையை பதிக்க துவங்கி விட்டனர்.