IOC: நெருக்கடி கொடுக்கும் சிபிஐ; இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் ஜகா வாங்கும் நரிந்தர்
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியுடன் சேர்ந்து சர்வதேச ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும் நரிந்தர் பாட்ரா செயல்பட்டு வருகிறார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நரிந்தர் பாட்ரா 2017ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. எனினும் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இதன்காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று நரிந்தர் பாட்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக ஹாக்கி தற்போது ஒரு முக்கியமான வளர்ச்சி பாதையை நோக்கி பயணத்து கொண்டிருக்கிறது. புதிதாக ஹாக்கி ஃபைஸ் போட்டி வர உள்ளது. எஃப்.ஐ.ஹெச் ஹாக்கி நாடுகள் கோப்பையும் வர உள்ளது. இந்தச் சூழலில் சர்வதேச ஹாக்கி சங்கத்தின் தலைவராக எனக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
Narinder Batra on why he decided not to seek re-election for IOA President pic.twitter.com/e5u2rc8Y6I
— Give Me Hockey (@hockeyind) May 25, 2022
ஆகவே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான் இனிமேல் போட்டியிட விரும்பவில்லை. இந்தப் பதவியிலிருந்து நான் விலகும் நேரம் வந்துவிட்டது. இப்பதவிக்கு அடுத்து புதிதாக ஒருவர் வந்து 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பணியாற்றியது எனக்கு மிகவும் கௌரவமாக அமைந்தது. இந்தப் பதவியில் இந்திய விளையாட்டின் வளர்ச்சிக்காக நான் உழைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி சங்கத்தின் தலைவராக இருந்தப் போது நரிந்தர் பாட்ரா 35 லட்சம் ரூபாய் வரை முறைக்கேடாக செலவு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருந்தது. இதன்காரணமாக அவர் தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில் நரிந்தர் பாட்ரா இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்