‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !
யார் இந்த ஷெஃபாலி வர்மா? எப்படி 17 வயதில் டெஸ்ட் போட்டி விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரங்கனையாக வலம் வர தொடங்கியுள்ளவர் ஷெஃபாலி வர்மா. இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப 17 வயது ஷெஃபாலி எந்த பந்துவீச்சாளரையும் கண்டு அஞ்சாமல் அதிரடி காட்டி வருகிறார். தற்போது இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும் அறிமுக வீராங்கனையாக களமிறங்கி 96 ரன்கள் விளாசி நான்கு ரன்களில் முதல் சதத்தை தவறவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்டவர் ராகுல் திராவிட் தான். அவர் 1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் சவுரவ் கங்குலியும் அறிமுக வீரராக களமிறங்கினார். கங்குலி சதம் கடந்து அசத்தினார். ஆனால் ராகுல் திராவிட் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை 5 ரன்களில் தவறவிட்டார்.
தற்போது அவருக்கு பிறகு ஷெஃபாலி வர்மா தனது அறிமுக போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவற விட்ட இரண்டாவது இந்தியர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இந்தச் சூழலில் யார் இந்த ஷெஃபாலி வர்மா? எப்படி 17 வயதில் டெஸ்ட் போட்டி விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்?
‘சச்சின் சச்சின்’:
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஷெஃபாலி வர்மா. இவரது தந்தை அப் பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். 2013ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியை சிறுமியான ஷெஃபாலி தனது தந்தையுடன் வந்திருந்தார். அந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். அப்போது 9 வயது ஷாபாலி வர்மா தனது தந்தையின் மேல் அமர்ந்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து 'சச்சின் சச்சின்' என்று தனது கிரிக்கெட் கடவுளை முதல் முறையாக பார்த்து ரசித்தார். சச்சின் மீது கொண்டு ஈடுபாட்டால் அவர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தார்.
தனது 10 வயதில் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் அவருடைய தந்தை ஒரு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்துள்ளார். எனினும் சிறுவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் ஷெஃபாலிக்கு காயம் ஏற்பட்டு விடும் என்பதால் அவர் விளையாட போட்டி அமைப்பாளர்கள் மறுத்துள்ளனர். இதை கண்டு வருந்தாமல் போட்டிகளில் பங்கேற்க ஒரு சிறந்த வழியை ஷெஃபாலியே தேர்ந்தெடுத்தார்.
தந்தையின் அறிவுரையும் புதிய ஐடியாவும்:
அதாவது தான் சிறுவர்கள் போல இருக்க வேண்டும் என்பதற்காக தனது முடியை ஒரு ஆண் குழந்தை போல் வெட்டியுள்ளார். அதற்கு பின் அவர் பெண் என யாரும் கண்டறியாததால் அவர் சிறுவர்கள் போட்டியில் விளையாடி நல்ல பயிற்சிப் பெற்றார். பின்னர் படிப்படியாக முன்னேறி ஹரியானா மகளீர் அணியில் இடம்பிடித்தார். ஷெஃபாலியின் கனவிற்கு அவரது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
ஷெஃபாலி அவர் கூறியது ஒன்றே ஒன்று தான். அது, “உனது வாழ்வில் முதல் 19ஆண்டுகள் உன்னுடையது. அதில் நீ என்ன வேண்டுமானாலும் செய்து பெரிதாக சாதிக்க வேண்டும். அவ்வாறு 19 வயதிற்குள் சாதிக்காமல் விட்டால், பிறகு நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவரது தந்தையின் வார்த்தைகளை ஒரு நல்ல தூண்டுகோளாக எடுத்து கொண்டு ஷெஃபாலி தீவிரமாக பயிற்சி செய்ய தொடங்கினார்.
சச்சின் சாதனையை முறியடிப்பு:
அதன் விளைவாக 2019ஆம் ஆண்டு தனது 15ஆவது வயதில் இந்திய மகளிர் டி20 அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய ஷெஃபாலி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 15வயது 285 நாட்களான ஷாபாலி வர்மா இந்தியாவிற்காக களமிறங்கி அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் தனது ஐகான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 16வயது 213 நாட்களில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்திருந்தார். அந்தச் சாதனையை ஷாபாலி முறியடித்திருந்தார். இந்தச் சாதனையை முறியடித்திருந்தாலும் அவருக்கு ஒரு நீண்ட நாள் கனவு இருந்துள்ளது. அது தனது கிரிக்கெட் கடவுளான சச்சின் டெண்டுல்கரை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான்.
சச்சின் தந்த அட்வைஸ்:
2020ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா சென்று இருந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய காட்டு தீக்கு நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்க சென்றார். அப்போது ஷெஃபாலி வர்மா தனது ஐகான் வீரர் சச்சினை நேரில் பார்த்தார். அதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “"நான் கிரிக்கெட்டை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் சச்சின் சார் தான். என்னுடைய குடும்பத்தினர் சச்சின் ரசித்தைவிட கடவுளாக நினைத்து வழிபட்டது தான் அதிகம். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், ஏனெனில் எனது கனவு நிறைவேறிய நாள்” எனப் பதிவிட்டிருந்தார்.
It was nice meeting you too, Shafali.
— Sachin Tendulkar (@sachin_rt) February 12, 2020
Hearing from you on how you had travelled all the way to Lahli to see my last Ranji Game & now seeing you play for India is amazing.
Keep chasing your dreams because dreams do come true.
Enjoy the game and always give your best. 👍
இதற்கு சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “"உங்களை சந்தித்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கடைசி ரஞ்சிக் கோப்பை போட்டியை நீங்கள் பார்க்க வந்த நீங்களே இந்தியாவிற்கு விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உங்களது கனவை தொடர்ந்து துரத்துங்கள். ஒருநாள் உங்கள் கனவு நிச்சயம் உண்மையாகும். எப்போதும் கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாடுங்கள். அத்துடன் எப்போதும் உங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த ஆட்டத்தை விளையாடுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.
தனது ஐகான் வீரர் சச்சின் கூறிய அட்வஸை அப்படியே எடுத்து கொண்டு தனது கனவை நோக்கி ஷெஃபாலி ஓடிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஷெஃபாலி-மந்தானா அபார அரைசதம்: 2ஆவது நாள் முடிவில் இந்தியா 187 ரன்கள் குவிப்பு !