India wins Silver: ஒரே தொடரில் இரண்டு பதக்கங்கள்! உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் சாதித்த இந்திய வீரர்கள்
பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதும், வெள்ளிப்பதக்கம் வெல்வதும் இதுவே முதன்முறை.
ஸ்பெயின் நாட்டின் ஹெல்வா நகரில் உலக பேட்மிண்டன் போட்டித்தொடர் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு தொடர் டிசம்பர் 19-ம் தேதி முடிவடைந்தது. இதில், தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷயா சென் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், மலேசிய வீரர் கீன் லூ யூவை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், 21-22, 15-20 என்ற செட் கணக்கில் யூ போட்டியை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி வரை எதிரணி வீரருக்கு டஃப் கொடுத்தார் ஸ்ரீகாந்த். இறுதியில், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் அவர்.
Kidambi Srikanth 🇮🇳 and Loh Kean Yew 🇸🇬 are as cool as cucumbers in this spectacular rally.#TotalEnergiesBadminton #BWFWorldChampionships #Huelva2021 pic.twitter.com/0FS7OzBCb1
— BWF (@bwfmedia) December 20, 2021
பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதும், வெள்ளிப்பதக்கம் வெல்வதும் இதுவே முதன்முறை. இதற்கு முன்பு 1983ம் ஆண்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 36 ஆண்டுகளுக்கு பிறகு, 2019ம் ஆண்டு பிரனீத் கடந்த 2019ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டு, கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கபப்ட்ட நிலையில், வெள்ளி வென்றிருப்பதும் இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.
28 வயதான ஸ்ரீகாந்த், ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இதே தொடரில், மற்றொரு இந்திய வீரரான 20 வயதேயான லக்ஷயா சென், ஸ்ரீகாந்த்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினார். இதனால், அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது. மகளிருக்கான பேட்மிண்டன் போட்டிகளைப் பொருத்தவரை, பி.வி.சிந்து காலிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஷூ யிங்கிடம் போராடி வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்