Hockey World Cup: உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயினை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி
உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் ஒடிசா மாநிலத்தில் இன்று தொடங்கியது.
இன்றைய முதல் நாளில் 4வது போட்டியாக இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில், இந்திய அணி 2 கோல்கள் அடித்து 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
முதல் போட்டி:
ஒடிசா மாநிலம் பிர்சா முண்டா மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியில், இந்திய அணியும் ஸ்பெயின் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது 12வது நிமிடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த அமித் ரோஹிதாசா கோல் அடித்து முதல் கோலை இந்திய அணிக்கு பதிவு செய்தார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதையடுத்து 21வது நிமிடத்தில் ஹர்திக்கும் கோல் அடிக்க இந்திய அணியின் பலம் வலுப்பெற்றது. இது ஸ்பெயின் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
அதையடுத்து எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என ஸ்பெயின் அணி முயற்சித்தும், இந்திய அணியினர், அதற்கு இடம் கொடுக்கவில்லை
உலக கோப்பை:
15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி உள்ளது. அதேபோல், இந்திய ரசிகர்கள் பார்வையும், ஏக்கமும் அதிகரித்துள்ளது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ’டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் போன்ற வலுவான அணிகளும் உள்ளது.
இந்நிலையில், முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணியை வீழ்த்தியது, இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊக்கத்தொகை:
இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஹாக்கி இந்தியா அமைப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மகுடம் சூடினால் ஒவ்வொரு வீரர்களும் தலா ரூ. 25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெள்ளிப்பதக்கம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சமும், உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்கப்படும் என்றும், வெண்கலப்பதக்கத்தை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா 2 லட்சமும் அளிக்கப்படும் என ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறுகையில்,” சீனியர் உலகக் கோப்பை போட்டியின் பதக்க மேடையில் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த ஊக்கத்தொகையானது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும்போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அவர்கள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட எங்களது வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
இந்தியா கடைசியாக கடந்த 1975 ம் ஆண்டு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வென்றது. அதன்பிறகு, இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்தவொரு பட்டத்தை வென்றதில்லை.
இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975 ம் ஆண்டு பட்டத்தையும், 1973 இல் ஆம்ஸ்டெல்வீனில் வெள்ளிப் பதக்கத்தைப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வருடம் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இடம் உள்ளது.