IND vs ENG, Oval Test: நீலாம்பரியாக மாறிய இங்கி., கிரிக்கெட் போர்டு: தோற்ற வீடியோவை பதிவிட்டு ரிபீட் வாட்சிங்!
கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை டிரா செய்ய இங்கிலாந்து போராடும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், போட்டியை வென்று அல்லது டிரா செய்து தொடரைக் கைப்பற்ற காத்திருக்கிறது இந்திய அணி.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை, ஓவல் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
டிராவை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் எடுக்க விடாமல் திணறடித்தனர்.
A disappointing session.
— England Cricket (@englandcricket) September 6, 2021
Scorecard/Clips: https://t.co/AEzwlCDErk
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/XIxWbbUQMQ
இந்திய அணி பெளலர்களைப் மாறி மாறி விக்கெட்டுகளை வீழ்த்திச் சென்றனர். உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா, ஷர்துல், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனால், 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி போட்டியில் தோற்றது. டிரா செய்யும் முனைப்பில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு இந்த தோல்வி எதிர்பாராதது. கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றியை மீட்டெடுத்தனர் இந்திய அணியினர்.
A disappointing defeat on the final day.
— England Cricket (@englandcricket) September 6, 2021
🏴 #ENGvIND 🇮🇳
இதனால், இங்கிலாந்து கிரிக்கெட்டும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். கிரிக்கெட் போட்டிகளின் நேரலை அப்டேட்டுகளை அந்தந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து கிரிக்கெட்டின் ட்விட்டர் பக்கத்தில் ஓவல் டெஸ்ட் போட்டி குறித்த அப்டேட்டுகள் பகிரப்பட்டு வந்தது. கடைசியாக போட்டியை இழந்த சோகத்தில், “கடைசி நாள் ஆட்டத்தில் ஏமாற்றமான தோல்வி” என பதிவிட்டு ஹைலைட்ஸ் வீடியோவை பகிர்ந்திருந்தது. படையப்பாவில் ரஜினியின் கல்யாண வீடியோவை ரிபிட்டாக பார்த்து நீலாம்பரி வெறி ஏற்றிக் கொள்வது போல, அந்த வீடியோவை பதிவிட்டு வெறியேற்றிக்கொள்கிறதா.. அல்லது புலம்பிக் கொள்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் பக்கத்தில் ஓவல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது குறித்த ஏமாற்றம் மிகுந்த பதிவுகளை காண முடிந்தது. இதனால், அடுத்து நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை டிரா செய்ய இங்கிலாந்து போராடும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், போட்டியை வென்று அல்லது டிரா செய்து தொடரைக் கைப்பற்ற இந்தியா காத்திருக்கிறது. செப்டம்பர் 10-ம் தேதி மேன்சஸ்டரில் பார்ப்போம்!