ICC Rankings Update: ஐசிசி ஒருநாள் தரவரிசை: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மஹராஜ் முதலிடம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் முடிந்துவிட்டது. இதனிடையே, அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதில், நாளை (நவம்பர் 14) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நவம்பர் 16-ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
சிறந்த பந்துவீச்சாளர்:
இந்நிலையில், ஐசிசி சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி முதல் இடத்தில் இருந்தார். நவம்பர் 8-ஆம் தேதி வெளியான ஐசிசியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேறினார். இச்சூழலில், இன்று (நவம்பர் 14) ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மஹராஜ் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
அசத்தல் பந்து வீச்சு:
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேசவ் மஹராஜ் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் இந்த உலகக்கோப்பை தொடரில் 24.71 சராசரியுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: IND vs NZ Semi Final: உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா வெல்லுமா? - ஜோதிடம் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Rohit Sharma: சிக்ஸர் அடிப்பதில் ரோஹித் ஷர்மாதான் ஃபர்ஸ்ட்.. புதிய சாதனையில் வலம் வரும் இந்திய கேப்டன்!