Anand Mahindra Kabaddi | ஒலிம்பிக்கில் 3 எக்ஸ் 3 கூடைப்பந்துக்கு அனுமதி.. கபடிக்கு அனுமதி இல்லையா? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கேள்வி
3 நபர்கள் மட்டுமே விளையாடும் 3 எக்ஸ் 3 கூடைப்பந்து போட்டிக்கு அனுமதி. கபடிக்கு மட்டும் ஏன் ஒலிம்பிக்கில் அனுமதி அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
3 நபர்கள் மட்டுமே விளையாடும் 3 எக்ஸ் 3 கூடைப்பந்து போட்டிக்கு அனுமதி கொடுத்தபோது ஆசிய நாடுகள் பல கொண்டாடும் கபடிக்கு மட்டும் ஏன் ஒலிம்பிக்கில் அனுமதி அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
3 எக்ஸ் 3 கூடைப்பந்து மகளிர் பிரிவில் அமெரிக்க அணி தங்கம் வென்றுள்ளது. முதல் தங்கத்தை வென்று வரலாற்றுக் கணக்கை அந்த அணி துவக்கி வைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சிறு குழுவினருக்கான விளையாட்டுகளுக்கு எதன் அடிப்படையில் ஒலிம்பிக்கில் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. புதிய விளையாட்டுகளுக்கு அனுமதியளிப்பதில் ஒலிம்பிக் கமிட்டியின் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக எனது அறிவு மிகமிகக் குறைவே. இருப்பினும், ஒரு விளையாட்டு எந்த நாட்டில் அதிகம் கொண்டாடப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு புதிய விளையாட்டுகளை அனுமதிப்பார்கள் போல! அப்படியென்றால், கபடியை ஏன் சேர்க்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகள்:
கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, கடந்த 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் ஆகியவை 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடக்கிறது. கராத்தே, சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் ஆகியவை புதிய விளையாட்டுகளாக இடம்பெற்றுள்ளன.
மூன்று பேர் விளையாடும் புதிய கூடைப்பந்து மற்றும் இரண்டு நபர்கள் குழு நிகழ்வான மேடிசன் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட சில புதிய நிகழ்வுகள் பாரம்பரிய விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. டிராக், நீச்சல், டிரையத்லான், வில்வித்தை மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட கலப்பு பாலின அணிகளுக்கான ரிலேக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்த வருடம் நடைபெறுகிறது.
புதிய விளையாட்டு முடிவு யார் கையில்?
ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டுகளை சேர்க்க வேண்டும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியே தேர்வு செய்கிறது. இந்தக் குழு உலகளவில் பிரபலமடைந்த விளையாட்டுகள் குறித்து ஆராயும். மேலும் வெவ்வேறு பிராந்தியங்களுக்காக அவர்கள் வெற்றிபெறக்கூடிய ஒரு சில விளையாட்டுகளை வழங்க முயற்சிக்கிறது.
அதென்ன 3 எக்ஸ் 3 போட்டி:
3x3 basketball (three-ex-three என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது அணிக்கு மூன்று பேர் மட்டுமே கொண்டு விளையாடப்படும் கூடைப்பந்து விளையாட்டு. இது அமெரிக்க நகரங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அண்மையில் இதனை சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் கூட்டமைப்பு FIBA அங்கீகரித்தது. ஃபிபா மாஸ்டர்ஸ் டூர்னமன்ட்டும் நடத்தியுள்ளது. இந்த விளையாட்டின் பிரபல்யத்தை அறிந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, எஸ்ஸெக் பிசினஸ் ஸ்கூலை இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள பணித்தது. அதன் ஆய்வு முடிவுகள் அடிப்படையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவினருக்கும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2022 காமன்வெல்த் போட்டியிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது.