Hockey World Cup: விறுவிறுப்பாகும் உலகக்கோப்பை ஹாக்கி..! நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் நாக்-அவுட் சுற்றில் இந்திய - நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.
உலக கோப்பை:
15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி உள்ளது. தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நான்கு பிரிவுகளை சேர்ந்த, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
நாக்-அவுட் சுற்றில் இந்தியா:
”டி” பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், வலுவான ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்துடனான லீக் போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அசத்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோல் கணக்கின் அடிப்படையில் ”டி” பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி நாக்-அவுட் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
நாக்-அவுட் சுற்று இன்று தொடக்கம்:
இதையடுத்து நான்கு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையேயான, நாக்-அவுட் சுற்று இன்று தொடங்க உள்ளது.
மலேசியா vs ஸ்பெயின் - ஜனவரி 22
இந்தியா vs நியூசிலாந்து - ஜனவரி 22
அர்ஜெண்டினா vs தென்கொரியா - ஜனவரி 23
ஜெர்மனி vs பிரான்சு - ஜனவரி 23
இந்தியா - நியூசிலாந்து மோதல்:
காலிறுதி இடத்தை உறுதி செய்வதற்கான நாக்-அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நியூசிலாந்து 12-வது இடத்திலும் இடத்திலும் உள்ளன. எந்தவித தேவையில்லாத தவறுக்கும் இடம் கொடுக்காமல் இந்திய அணி விளையாடினால், எளிதில் காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 24-ல் இந்தியாவும், 15-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
இந்திய அணி நிலவரம்:
தசைப்பிடிப்பால் அவதிப்படும் நடுகள வீரர் ஹர்திக் சிங் தொடரில் இருந்து விலகினார். தாக்குதல் ஆட்டத்திற்கு பெயர் போன ஹர்திக்கின் விலகல் இந்தியாவுக்கு நிச்சயம் பின்னடைவு தான். அவருக்கு பதிலாக ராஜ்குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மூத்த வீரர்கள் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப், மன்தீப்சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோர் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டியது உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
இந்திய அணியின் கருத்து:
நாக் - அவுட் போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட், ”நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது. கடந்த ஆண்டு புரோ ஹாக்கி லீக்கில் இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தாலும், அதில் முதல் ஆட்டம் கடுமையாக இருந்தது. எனவே அவர்களை வீழ்த்த எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்' என்றார்.
போட்டி தொடங்கும் நேரம்:
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு, புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். இறுதிப்போட்டி வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.