"கோலி உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய ஆசை" நம்ம கம்பீரா இது.. ஒரே ஃபன்
இந்திய அணியில் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசிய கம்பீர், "தேர்வுக்குழுவே வீரர்களை தேர்வு செய்கிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்றார்.

எதாவது ஒரு கிரிக்கெட் வீரரின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய வேண்டும் என்றால், அது விராட் கோலியின் உடலாகத்தான் இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நகைச்சுவையாக கூறியுள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வரும் ஏபிபி 2047 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசியல், இந்தியா - பாகிஸ்தான் உறவு, விராட் கோலி, கொல்கத்தா அணி உள்பட பல்வற்றை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கம்பீரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெற்றி பெற்று 2024ஆம் ஆண்டு வரை எம்பியாக பதவி வகித்தார். ஆனால், கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
இந்த நிலையில், ஏபிபி 2047 உச்சி மாநாட்டில் தன்னுடைய அரசியல் வாழ்க்கை குறித்து பேசிய அவர், "நான் இருக்கும் இடத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதற்கும் நான் வருத்தப்படவில்லை. நான் ராணுவத்தில் இருந்திருக்க வேண்டும் என விரும்பு இருக்கிறேன். அதுதான் எனது ஒரே வருத்தம். ராணுவம்தான் எப்போதும் எனது முதல் காதலாக இருக்கும்" என்றார்.
பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி:
பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பேசிய கம்பீர், "என்னுடைய தனிப்பட்ட பதில் நிச்சயமாக விளையாடக் கூடாது. நாட்டு மக்களையும் வீரர்களையும் விட கிரிக்கெட் போட்டிகள், பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் முக்கியமானவர்கள் அல்ல. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எதுவும் இருக்கக்கூடாது" என்றார்.
2011 உலகக் கோப்பை வெற்றியில் கம்பீருக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்களே என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் அங்கீகாரத்திற்காக விளையாடுவதில்லை.
கோலியை பாராட்டிய கம்பீர்:
எனக்குப் புகழ் கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள்தான் எனக்குப் புகழ் அளிக்காதவர்கள். சாமானிய மக்கள் இதற்காக எனக்கு மிகுந்த அன்பு செலுத்தினர். இறுதியில், உலகக் கோப்பை வென்ற அணியில் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். தனிப்பட்ட ஸ்கோர்களை யாரும் நினைவில் கொள்வதில்லை" என்றார்.
எந்த கிரிக்கெட் வீரரின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய விரும்புகிறீர்கள் என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு கிரிக்கெட் வீரரின் உடலில் நுழைய வேண்டும் என நினைத்தால், அது விராட் கோலியாகத்தான் இருக்கும். ஏனென்றால், அவர்தான் அணியிலேயே ஃபிட்டான வீரர்" என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
ரோகித், கோலியின் எதிர்காலம்:
கொல்கத்தா அணியை மிஸ் செய்கிறீர்களா என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, "சத்தியமா சொல்லணும்னா, இல்லை. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது" என்றார்.
இந்திய அணியில் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசிய கம்பீர், "தேர்வுக்குழுவே வீரர்களை தேர்வு செய்கிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எந்த பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது BCCIயோ உங்களை விளையாடுவதை நிறுத்தச் சொல்ல முடியாது. நன்றாக விளையாடுவது மட்டுமே ஒரு வீரரின் தேர்வை உறுதி செய்கிறது" என்றார்.





















