FIFA WORLDCUP 2022: அடுத்தடுத்து 4 கோல்கள்: கால் இறுதிக்குள் நுழைந்து அதகளப்படுத்திய பிரேசில்..!
FIFA WORLDCUP 2022: தென் கொரியாவுக்கு எதிராக அடுத்தடுத்து 4 கோலகள் அடித்து, கால் இறுதிக்குள் நுழைந்து மற்ற அணிகளுக்கு, பிரேசில் அச்சத்தினை மூட்டியுள்ளது.
FIFA WORLDCUP 2022: தென் கொரியாவுக்கு எதிராக அடுத்தடுத்து 4 கோலகள் அடித்து, கால் இறுதிக்குள் நுழைந்து மற்ற அணிகளுக்கு, பிரேசில் அச்சத்தினை மூட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதாவது லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியுள்ளன.
இதில் ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. இதில், நள்ளிரவு 12.30க்கு நடைபெற்ற போட்டியில், பிரேசில் அணியும், தென் கொரியா அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி 974 மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னரே பிரேசில் அணிதான் போட்டியை வெல்லும் என ரசிகர்களின் கருத்துகணிப்பில் இருந்ததைப் போலவே போட்டியும் அமைந்தது. போட்டியின், தொடக்கம் முதலே பிரேசில் அணி கோல் அடித்தது. போட்டி தொடங்கி 7வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினி கோல் அடித்து போட்டியில் உற்சாகத்தினை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் போட்டியின் 13வது நிமிடத்தில் கிடைத்த பொனால்டி ஷாட்டில் அணியின் நட்சத்திர நாயகன் நெய்மர் கோல் அடித்தார். இதனால் போட்டி 2 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை வகித்தது.
View this post on Instagram
முன்னிலை வகிக்கிறோம், மீதமுள்ள நேரத்தினை பந்தை பாஸ் செய்து நேரத்தினை வீணடிக்காமல், மிகவும் துரிதமாக விளையாடிய பிரேசில் அணி, போட்டியின் 29வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தது. இம்முறை கோல் அடித்தவர், ரிச்ஆர்லிசன். அதன் பின்னர் அடுத்த 7 நிமிடத்தில் பிரேசில் அணியின் லூகஸ் கோல் அடிக்க போட்டியில் பிரேசில் அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. முதல் பாதியில் கோல் அடிக்காத தென் கொரிய அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி பிரேசில் அணி வீரர்களுக்கு தங்களது பலத்தினை காண்பித்து வந்தது. போட்டியின் 76வது நிமிடத்தில் தென் கொரிய அணியின் பைக் செயிங்கோ மிகவும் சிறப்பாக கோல் அடித்தார். ஆனால் இந்த கோல் அணிக்கு ஆறுதலாக மட்டுமே இருந்தது எனலாம். போட்டியின் முடிவில் பிரேசில் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.