FIFA worldcup 2022: குரூப் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி.. ஆட்டத்தின் முக்கிய ஹைலைட்ஸ் இதோ..
இன்றைய முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 30-ஆவது இடத்தில் உள்ள துனிசியா, 38-ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளுக்கு நாள் பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 30-ஆவது இடத்தில் உள்ள துனிசியா, 38-ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
முதல் பாதியிலேயே ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் டியூக் அற்புதமான ஒரு கோலை அடித்தார்.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியா வசமே கால்பந்து அதிகம் இருந்தாலும் அந்த அணியால் கடைசி வரை ஒரு கோலை கூட போட முடியாமல் போனது அந்நாட்டு ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.
தவறுகளையும் (FOULS) அதிகம் துனிசியா வீரர்கள் செய்தனர். மஞ்சள் அட்டை மூன்று முறை துனிசியா வீரர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
குரூப் டி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம், உலகக் கோப்பை கால்பந்தில் மூன்று கண்டத்தை (ஆசியா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா) சேர்ந்த அணிகளை வீழ்த்தியுள்ளது.
மேலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா கோல்களை பதிவு செய்துள்ளது.
அனைத்துப் போட்டிகளையும் சேர்த்து மைக்கோல் டியூக், ஆஸ்திரேலிய அணிக்காக 5 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆட்டம் அல் ஜனாப் ஸ்டேடியத்தில் (Al Janoub Stadium) நடைபெற்றது. பாரசீக வளைகுடாவில் ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று இந்த ஸ்டேடியத்தின் மேற்பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இங்கு 6 லீக் மற்றும் ஒரு நாக்-அவுட் சுற்று ஆட்டம் நடக்கிறது. மொத்தம் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.
Australia secure the three points! 🦘@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.