FIFA World Cup 2022: கோல் மழையில் நனைந்த ரசிகர்கள்.. சமனில் முடிந்த செர்பியா Vs கேமரூன் போட்டி
கால்பந்தாட்ட உலகக்கோபை தொடரின் இன்றைய லீக் போட்டியில், செர்பியா - கேமரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
செர்பியா Vs கேமரூன்:
கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று லீக் போட்டியில், குரூப் ஜி பிரிவில் உள்ள செர்பியா மற்றும் கேமரூன் அணிகள் இன்று மோதின. நடப்பு தொடரில் இதுவரை வெற்றியை பதிவு செய்யாத இரு அணிகளும், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கின.
செர்பியா அசத்தலான ஆரம்பம்:
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். செர்பியா தடுப்பு வீரர்களின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், போட்டி தொடங்கிய 29வது நிமிடத்திலேயே கேமரூன் அணியின் ஜீன் சார்லஸ் தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இதனால் ஆட்டம் சூடுபிடிக்க, முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் செர்பியா அணியின் பாவ்லோவிக் மற்றும் மிலின் கோவிக் - சாவிக் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை அடிக்க, மைதானமே ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்தது. இதனால் முதல் பாதியின் முடிவில் 2-1 என்ற கணக்கில் செர்பியாவின் கை ஓங்கி இருந்தது.
மீண்டு வந்த கேமரூன் அணி:
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் மீண்டும் செர்பியா அணி வீரர்கள் பந்தை எதிர்முனைக்கு கொண்டு செல்வதில் தீவிரம் காட்டினர். அதன் விளைவாக நேர்த்தியாக பந்தை கடத்திச் சென்ற அலெக்சாண்டர் மிட்ரோபிக், 53வது நிமிடத்தில் கோலடிக்க செர்பியா 3-1 என முன்னிலை பெற்றது. இதனால் போட்டியில் செர்பிய அணியின் வெற்றி உறுதி என கருதிய நிலையில், கேமரூன் அணி வீரர்கள் மனம் தளாராமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக எதிரணிக்கு அணிக்கு பதிலடி தரும் வகையில், போட்டியின் 63வது நிமிடத்தில் வின்சென்ட் அபூபக்கர் 63 நிமிடத்தில் கேமரூன் அணியின் இரண்டாவது கோலை அடிக்க, வெறும் 3 நிமிட இடைவெளியில் எரிக் மாக்சிம் அடுத்த கோலை பதிவு செய்தார். இதன் மூலம், 3-3 என இரு அணிகளும் சமநிலையை எட்டின. இதனால் கேமரூன் அணி ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரித்தனர்.
சமனில் முடிந்த போட்டி:
இதையடுத்து போட்டியில் வெற்றியை உறுதி செய்ய இரு அணி வீரர்களும் தீவிரம் காட்டினர். இரு அணிகளின் முன்கள வீரர்களின் முயற்சிகளும், எதிரணியின் தடுப்பு ஆட்டக்காரர்களால் முறியடிக்கப்பட்டது. இறுதிவரை போராடியும், இரு அணி வீரர்களாலும் கூடுதல் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், கேமரூன் Vs செர்பியா அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி சமனில் முடிந்தது.
புள்ளிப்பட்டியல்:
போட்டியின் மொத்த நேரத்தில் 60% பந்து செர்பியா அணி வசமே இருந்தது. அந்த அணி 501 முறை பந்தை செய்தாலும், 340 முறை மட்டுமே பந்தை பாஸ் செய்ய வாய்ப்பு கிடைத்த கேமரூன் அணி வீரர்கள், கிடைத்த வாய்ப்பை கோல்களாக்கி தோல்வியை தவிர்த்தனர். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜி பிரிவில் தலா ஒரு புள்ளிகளுடன் முறையே கடைசி இடத்தில் உள்ள கேமரூன் மற்றும் செர்பியா அணிகள், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளன.