FIFA World Cup 2022 Qatar: ரொனால்டோவை பெஞ்சில் உட்கார வைத்ததால் தோற்றோமா? - போர்ச்சுகல் பயிற்சியாளர் பதில்
இந்த ஆட்டத்தில் ஆகச் சிறந்த வீரரான ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்திருந்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ். அதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்காவும், போர்ச்சுகல் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கா அணி வென்றது. இந்த ஆட்டத்தில் ஆகச் சிறந்த வீரரான ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்திருந்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ்.
ஒருவேளை ரொனால்டோ ஆட்டத்தின் முழு நேரமும் விளையாடி இருந்தால், அந்த அணி ஜெயித்திருக்க வாய்ப்பிருப்பதாக போர்ச்சுகல் ரசகிர்களில் பெரும்பாலானோர் புலம்பி வருகின்றனர். ஆட்டம் முடிந்ததும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் ரொனால்டோ. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையுமே மனம் உருகச் செய்தது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெர்னான்டோ சான்டோஸ் கூறியதாவது:
ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்ததற்காக நான் வருந்தவில்லை. அணிக்காக சிந்திக்கும்போது என்னால் மனதிலிருந்து யோசிக்க முடியாது.
காலிறுதிக்கு முந்தைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக விளையாடி இதே போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, அணியில் மாற்றத்தை புகுத்த எனக்கு விருப்பம் இல்லை. இது கடினமான முடிவுதான் என்றாலும் என்னால் மனதில் இருந்து சிந்திக்க முடியாது. அணிக்காக சிந்திக்கும்போது மூளை சொல்வதை தான் கேட்க முடியும்.
Uma equipa que deu tudo em campo. Adeptos que nunca se cansaram de puxar pela Seleção, em qualquer parte do mundo. Queríamos todos chegar mais longe, mas vamos continuar juntos a orgulhar Portugal. 🇵🇹 pic.twitter.com/UAmMNgPN3o
— Portugal (@selecaoportugal) December 10, 2022
அப்படியென்றால் நான் ரொனால்டோ சிறந்த வீரர் இல்லை என்று கூறவில்லை. அவர் இருந்திருந்தாலும் இதுதான் நிலை என்று கூறுகிறேன். போர்ச்சுகல் அணி சிறப்பானதை செய்தது. ஆனால், மொராக்கோ அணி இன்னும் சிறப்பாக விளையாடினர்.
எங்கள் அணி வீரர்கள் ஜாவோ ஃபெலிக்ஸ், புரூனோ பெர்னான்டஸ் ஆகியோர் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டனர். இல்லையென்றால் ஆட்டம் சமன் ஆகியிருக்கும். கால்பந்தை பொருத்தவரை சில நேரங்களில் அதிர்ஷடமும் தேவை. எங்கள் அணிக்கு அது அந்த ஆட்டத்தில் கிடைக்காமல் போனது. அவ்வளவே.
நான் ராஜிநாமா செய்யப் போகிறேனா என்று கேட்கிறீர்கள். அதுகுறித்து இன்னும் நான் எதுவும் முடிவு செய்யவில்லை. அடுத்த வாரம் போர்ச்சுகல் கால்பந்து சங்கத்தின் தலைவரை சந்திக்க உள்ளேன். அப்போது தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் என்றார் பெர்னான்டோ சான்டோஸ்.