Fake IPL Set Up: குஜராத்தில் நடந்த போலி ஐ.பி.எல்..! காலிறுதி வரை அரங்கேறிய அதிர்ச்சி..! ரஷ்ய சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு..!
ரஷ்ய சூதாட்ட கும்பலுடன் இணைந்து குஜராத்தில் போலி ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு இடங்களில் ரகசியமாக அவ்வப்போது சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோடியளவில் பணப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகளவில் பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல், போட்டியை போல போலி ஐ.பி.எல். போட்டி நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசனா மாவட்டத்தில் உள்ள மோலிப்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷ்யாவில் உள்ள சூதாட்ட கிளப் ஒன்றில் எட்டு மாதங்கள் பணியாற்றிய சோயிப் தாவ்தா என்பவரின் கண்காணிப்பின் பேரிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து திரும்பிய சோயிப், ரஷ்யாவில் உள்ள சூதாட்ட தரகர்களுடன் இணைந்து போலி ஐ.பி.எல். போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஒரு போட்டிக்கு ரூபாய் 400 சம்பளம் என்ற அடிப்படையில் 21 நபர்களை பணிக்கு எடுத்துள்ளார். பின்னர், 5 எச்.டி. கேமராவை வாங்கியதுடன் அதை இயக்க கேமராமேன்களையும் பணிக்கு எடுத்துள்ளார். கிராமத்தில் வேலையில்லாமல் சுற்றித்திரியும் படித்த இளைஞர்களை கொண்டு இந்த போட்டியை நடத்தியுள்ளனர்.
அவர்களை கிரிக்கெட் வீரர்களாக களமிறக்கி அவர்களுக்கு சென்னை சூப்பர்கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் டீ சர்ட்களை அணிய வைத்து ஆட வைத்துள்ளனர். இந்த போட்டிகள் அனைத்தும் யூ டியூப்பில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த போட்டியை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளேவின் குரல் போன்றே மிமிக்ரி செய்யும் நபரை வைத்து இந்த போட்டிக்கு வர்ணனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மீரட்டில் இருந்து பலகுரல் மன்னன் ஒருவரையும் வரவழைத்துள்ளனர்.
இந்த போட்டிக்காக போலி வாக்கி டாக்கிஸ், போலி அம்பயர்கள் என அனைத்தும் பக்காவாக செட் செய்யப்பட்டிருந்தது. அம்பயர்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர் எந்த பந்தை எப்படி வீச வேண்டும் என்று கூறிவிடுவார். பந்துவீச்சாளரும் அதேபோல வீச, பேட்ஸ்மேனும் அம்பயர் சிக்ஸர் அடிக்கச் சொன்னால் சிக்ஸ், பவுண்டரி அடிக்கச் சொன்னால் பவுண்டரி அடிப்பார். போட்டியை பார்வையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் கரகோஷங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அதுவும் முறையாக எடிட் செய்யப்பட்டு இந்த போட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த போலி ஐ.பி.எல். போட்டியில் ரஷ்யாவின் ட்வெர், வோரோனெஷ், மாஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த போட்டிக்கான சூதாட்டம் டெலிகிராம் மூலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த போலி ஐ.பி.எல். காலிறுதி போட்டி வரை நடைபெற்ற பிறகே போலீசாரால் கண்டறியப்பட்டு, இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்