Year Ender 2022: முதல் மூன்று இடங்களுக்குள் கோலியும், ரோகித்தும் இல்லை.. இந்தாண்டு இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்!
2022ம் ஆண்டு அனைத்து பார்மேட்களையும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வெற்றியுடன் இந்திய அணி இந்தாண்டை முடித்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
இந்தாண்டு இந்திய அணிக்காக விளையாடிய பல வீரர்கள் பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் அசத்தினர். ஆனால், ஐசிசி கோப்பைக்கான கனவை மட்டும் இந்திய அணியால் இந்தாண்டு எட்ட முடியவில்லை. விராட் கோலியிடம் இருந்து ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரோகித் - டிராவிட் கூட்டணி இந்திய அணியை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 2022ம் ஆண்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ஆனால், இறுதிப்போட்டியை மட்டும் அவர்களால் எட்ட முடியவில்லை. இதையடுத்து, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது நீண்ட கால சத வறட்சியை டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முடிவுக்கு கொண்டு வந்து தனது 71வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை முந்தினார். அதேபோல், இதே போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்தியாவுக்காக ரன் எண்ணிக்கையில் எப்போதும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லை. அதுமட்டுமில்லாமல், மூன்று இடங்களுக்குள்ளும் அவர்கள் இடம்பெறவில்லை.
இந்தநிலையில், இந்தாண்டு இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை கீழே காணலாம்.
2022ம் ஆண்டு அனைத்து பார்மேட்களையும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்திய அணிக்கான இந்தாண்டு 39 போட்டிகளில் விளையாடி, 92.89 ஸ்டிரைக் ரேட்டுடன் 1609 ரன்கள் எடுத்துள்ளார்.
1732 பந்துகளை சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர் 48.75 சராசரியில் 14 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் 0.68 சராசரியுடன் 1424 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அனைத்து பார்மேட்களிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
- ஷ்ரேயஸ் ஐயர்: 1609 ரன்கள்
- சூர்யகுமார் யாதவ்: 1424 ரன்கள்
- ரிஷப் பந்த்: 1380 ரன்கள்
- விராட் கோலி: 1348 ரன்கள்
- ரோகித் சர்மா: 995 ரன்கள்
ரோகித் சர்மாவின் பேட்டிங் செயல்திறன் :
2022 ம் ஆண்டியில் ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக 39 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்கள் உள்பட 995 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 76 ரன்கள் மட்டுமே. அதுவும், கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதிவானது. அதிகபட்சமாக இந்தாண்டு 4 முறை டக் அவுட்டாகி உள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ரோகித் சர்மா வெறும் 25 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 சதங்கள், 9 அரை சதங்களுடன் 1420 ரன்கள் எடுத்திருந்தார்.