Yashasvi Jaiswal Record: ”நான் அடிச்ச 10 பேரும் டான்தான்” ஒத்த போட்டியில் மொத்த ரெக்கார்ட்ஸையும் ஊதித்தள்ளிய ஜெய்ஸ்வால்
Yashasvi Jaiswal Test Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஜெய்ஸ்வால் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் யெஸெஷ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி உலகக் கிரிக்கெட் அரங்கில் தனக்கான இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஜெய்ஸ்வால்.
அசத்திய ஜெய்ஸ்வால்:
அந்த டெஸ்ட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த 57 ரன்களில் பல சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் 92 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒரு அணிக்கு எதிராக 26 சிக்ஸர்கள் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் இந்த தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் 26 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
கோலி சாதனை முறியடிப்பு:
முதல் டெஸ்ட்டில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்ட்டில் இரைட்டைச் சதம் விளாசி அசத்தினார். மூன்றாவது டெஸ்ட்டிலும் இரைட்டைச் சதம் விளாசி இங்கிலாந்து அணி தலைவலியாகவே மாறினார். நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டில் அரைசதம் விளாசி மிரட்டிவிட்டுள்ளார். இதன் மூலம் ஐந்து போட்டிகளிலும் அரைசதம் மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இதுவரை அதாவது ஐந்தாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் வரை 712 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை (692 ரன்கள்) ஜெய்ஸ்வால் அணி முறியடித்துள்ளார்.
1000 ரன்கள்:
22 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1028 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் எட்டிய மற்றும் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் ஆயிரத்து 467 பந்துகளை எதிர் கொண்டு இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். இவரது ஆவரேஜ் ஸ்கோர் 70.07 ஆக உள்ளது. இதில் இரண்டு இரட்டைச் சதங்கள் மூன்று சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும்.
ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ள ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமுறை வீரர்களில் கட்டாயம் இடம் பெறுவார் என்ற நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் மோகத்தால் பெரும்பான்மையான கிரிக்கெட் உலகம் இருக்கும்போது ஒரு இளம் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்து வருகின்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி அணியில் சொந்த காரணங்களால் களமிறங்கவில்லை. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்தபோது விராட் கோலி இல்லாததை ஒரு காரணமாக கூறினர். ஆனால் விராட் கோலி இல்லை என்பதை மறக்க வைத்து இங்கிலாந்து அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினால் பதிலடி கொடுத்து வருகின்றார் ஜெய்ஸ்வால் எனும் புதிய ரன் மெஷின்.