World Cup 2023: உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே... பேட்டிங், பவுலிங்கை வலுப்படுத்துமா இந்தியா..?
உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது. 50 ஓவர் உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஆடி வருகின்றன.
இந்திய அணி படுதோல்வி:
இந்த நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி இந்திய அணியின் பேட்டிங் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சொந்த மண்ணில் மோசமான தோல்வியை தழுவியிருப்பது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த போட்டியில் விராட்கோலி மட்டும் 31 ரன்களை எடுத்தார். கேப்டன் ரோகித்சர்மா 13 ரன்களுக்கும், சுப்மன்கில், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 9 ரன்னில் வெளியேறினார்.
தடுமாறும் சூர்யகுமார்யாதவ்:
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணிகளில் இந்தியா முதன்மையான அணியாகும். ஆனால், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அனைத்தையும் சரித்துவிட்டார். அதுவும் இந்தியாவின் 360 டிகிரி எனப்படும் சூர்யகுமார்யாதவ் கடந்த 2 போட்டிகளிலும் மோசமாக ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டி தவிர அதற்கு முந்தைய ஏராளமான போட்டிகளிலும் சொதப்பினார்.
இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கு தகுந்த வீரராக உருவெடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் இடது கை வேகப்பநதுவீச்சில் தடுமாறுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவர் மட்டுமின்றி ரோகித், விராட்கோலி, கே.எல்.ராகுல் என இந்தியாவின் வலது கை பேட்ஸ்மேன்கள் பலரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தடுமாறுவது எதிரணிகளுக்கு சாதகமாக மாறி வருகிறது. இதை உடனடியாக களைய வேண்டியது அவசியம் ஆகும். ஆல்ரவுண்டரில் அக்ஷர், ஜடேஜா சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மோசமான பவுலிங்:
முதல் போட்டியில் பவுலிங்கில் அசத்திய இந்திய அணி கடந்த போட்டியில் பவுலிங்கில் மோசமாக இருந்தனர் என்பதே உண்மை. 118 ரன்கள் இலக்கை வெறும் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் விட்டுக்கொடுத்தது இந்திய அணியின் பவுலிங் எந்தளவு பலவீனமாக உள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது.
முகமது ஷமி,. முகமது சிராஜ், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் என முன்னணி பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்பது ஏமாற்றமே ஆகும். இதனால், இனி வரும் ஆட்டங்களில் இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் கூடுதல் கவனமும், சீரான ஆட்டமும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 2011ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 2015 மற்றும் 2019ம் ஆண்டு அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Wisden Best XI WTC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; விஸ்டனின் சிறந்த டெஸ்ட் அணி - இந்தியாவில் இவங்க 3 பேருதான் பெஸ்ட்..!