WC Qualifiers: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதமடித்த அமெரிக்க வீரர்.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தல்..!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமெரிக்க வீரர் சதமடித்து அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், உலககோப்பை தகுதிச்சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தகுதிச்சுற்று போட்டியில் ஹராரேவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் நேருக்கு நேர் மோதின.
297 ரன்கள் இலக்கு:
டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிககு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரண்டன் கிங் டக் அவுட்டாகியும், கைல் மேயர்ஸ் 2 ரன்னிலும் அவுட்டானார். அடுத்து கேப்டன் ஷாய் ஹோப் – சார்லஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். பொறுப்புடன் ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர். கேப்டன் ஹோப் 54 ரன்களில் அவுட்டாக, சார்லசும் 66 ரன்களில் அவுட்டானார்.
அதிரடி வீரர் பூரண் 28 பந்தில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 55 ரன்களும், ஹோல்டர் 56 ரன்களும் குவிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்களை குவித்தது. அமெரிக்க வீரர் நெட்ரவால்கர், பிலிப், ஸ்டீவன் டெயிலர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அமெரிக்க வீரர் சதம்:
இதைத்தொடர்ந்து 298 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு சுஷாந்த் 14 ரன்களிலும், ஸ்டீவன் 18 ரன்களிலும் அவுட்டானார். கேப்டன் மோனங்க் படேல் 6 ரன்களிலும், முக்காமல்லா டக் அவுட்டானர்.
ஆனால், 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கஜனாத் சிங் எந்தவொரு பதற்றமுமின்றி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொண்டார். அவருக்கு ஷயான் ஜஹாங்கீர் ஒத்துழைப்பு அளித்தார். அவர் 39 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஜஸ்தீப்சிங் 6 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கெஞ்சிகோ நன்றாக கஜனாத் சிங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட கஜனாத்சிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். கடைசியில் அமெரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், அமெரிக்க அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அனுபவமிக்க வீரர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமெரிக்க வீரர் சதமடித்திருப்பதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Ashes 1st Test: விறுவிறுப்பான கட்டத்தில் ஆஷஸ்.. ஆஸ்திரேலியாவிற்கு வலுவான இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து?
மேலும் படிக்க: World Cup 2023: சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரா விளையாட மாட்டோம்.. வேற இடத்தை மாத்துங்க..! பாகிஸ்தான் கோரிக்கை!