Ashes 1st Test: விறுவிறுப்பான கட்டத்தில் ஆஷஸ்.. ஆஸ்திரேலியாவிற்கு வலுவான இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து?
பர்மிங்காமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வலுவான இலக்கை இங்கிலாந்து நிர்ணயிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
எட்ஜ்பாஸ்டன் நகரின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ய 2வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த நேற்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
386 ரன்களுக்கு ஆல் அவுட்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை விட அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அலெக்ஸ் கேரி 66 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு கவாஜா – கம்மின்ஸ் கூட்டணி சிறிது நேரம் நிலைத்து நின்றது. 372 ரன்களை எட்டியபோது கவாஜா 142 ரன்களில் ராபின்சன் பந்தில் போல்டானார். அவர் 321 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசியுள்ளனர்.
அடுத்து வந்த லயன் 1 ரன்னுக்கும், போலந்து டக் அவுட்டாகியும் வெளியேற கேப்டன் கம்மின்ஸ் கடைசி விக்கெட்டாக 62 பந்துகளில் 3 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களை எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?
கடந்த இன்னிங்சில் அசத்திய ஜாக் கிராவ்லி இந்த இன்னிங்சில் அசத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். 27 ரன்களை எடுத்தபோது கடந்த இன்னிங்சில் சிறப்பாக ஆடாத பென் டக்கெட் 19 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே ஜாக் கிராவ்லி 25 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 3ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது.
கடந்த இன்னிங்சில் சதமடித்த ரூட் மற்றும் ஒல்லி போப் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். போட்டி இன்று 4வது நாளாக நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 35 ரன்கள் இலக்குடன் முன்னிலையுடன் உள்ள இங்கிலாந்து 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் இலக்கு நிர்ணயித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்த திட்டமிடும் என்றும் எதிர்பார்க்கலாம். முதல் இன்னிங்சில் சதமடித்த ஜோ ரூட் இந்த இன்னிங்சிலும் அசத்தலாக ஆடினால் இங்கிலாந்து அணி இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
போட்டியின் கடைசி 2 நாட்களில் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், போட்டியில் கண்டிப்பாக முடிவு கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: World Cup 2023: சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரா விளையாட மாட்டோம்.. வேற இடத்தை மாத்துங்க..! பாகிஸ்தான் கோரிக்கை!
மேலும் படிக்க: Ashes 2023: 10 ஆண்டுகளில் 15 முறை அவுட்... வார்னரை திணறடிக்கும் பிராட்.. இங்கிலாந்து மண்ணில் எத்தனை முறை தெரியுமா?