IND vs PAK: இந்திய சுழலில் சிக்கி தவித்த பாகிஸ்தான்: வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரை துவக்கிய மகளிர் அணி !
மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இன்று தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களின் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதில் 7ஆவது விக்கெட்டிற்கு ஸ்நேஹ் ரானா மற்றும் பூஜா வட்சராக்கர் 122 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.
That's that from #INDvPAK game at #CWC22.
— BCCI Women (@BCCIWomen) March 6, 2022
Pakistan are bowled out for 137 in 43 overs.#TeamIndia WIN by 107 runs.
Scorecard - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/jmP7xCPowi
இதைத் தொடர்ந்து 245 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதலில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகள் நிதான தொடக்கத்தை அளித்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசினார். அவருடன் சேர்ந்து தீப்தி சர்மா மற்றும் ஸ்நேஹ் ரானா உள்ளிட்டோரும் சிறப்பாக பந்துவீசினர். இதனால் பாகிஸ்தான் அணி 28 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது 70 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட் வீழ்த்தினார். ஜூலன் கோசாமி, ஸ்நேஹ் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
மகளிர் உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்