IND vs AFG: மூன்றாவது டி20 மழையால் பாதிக்கப்படுமா? பெங்களூரில் மேட்ச் நாளில் இப்படித்தான் இருக்கும் வானிலை!
மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் நாளில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தூர் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், இந்த தொடரின் மூன்றாவது டி20 ஜனவரி 17 அன்று நடைபெறுகிறது. இரு அணிகளுமே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது.
இந்தநிலையில், மூன்றாவது டி20 மழையால் கைவிடப்படுமா? போட்டி நாளில் பெங்களூரில் மழை பெய்யுமா? மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் நாளில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டி நடைபெறும் நாளில் வானம் மேகமூட்டம்:
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உண்மையில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. போட்டி நடைபெறும் நாளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆனால் மழை பெய்யாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தூர் டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி:
முன்னதாக இந்தூரில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. டாஸ் இழந்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். இது தவிர, ஷிவம் துபே 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 63 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரம், 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி:
முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி. சொந்த மண்ணில் டி20 தொடரை இந்தியா வெல்வது இது முதல் முறையோ அல்லது ஓரிரு முறையோ அல்ல, கடந்த 15 டி20 தொடரில் இந்தியாவை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 15வது தொடர் தொடர்கிறது.
இந்திய அணி கடைசியாக பிப்ரவரி 2019 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்தது. இது 2 போட்டிகள் கொண்ட தொடராகும். இரண்டு போட்டிகளிலும் வென்று, சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார சாதனை படைத்தது. பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் டி20 தொடரை இழக்கவில்லை.
ஜூன், 2019 முதல் உள்நாட்டு டி20 தொடரில் இந்திய அணி:
விளையாடிய தொடர் – 15
இந்தியா வென்றது – 13
இந்தியா தோல்வி – 00
தொடர் சமநிலை – 02.