மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் இந்தியா?- நியூசி. டெஸ்ட் தொடரில் சாதிக்குமா?
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை கான்பூரில் தொடங்க உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்றது. இதில் 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி கான்பூரில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு விராட் கோலி இல்லாததால் ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் டி20 கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 126 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்து கீழே இறங்கியது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 அல்லது 2-0 என்ற கணக்கில் வென்றால் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும்.
ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் பெறும். அதேபோல் நியூசிலாந்து அணி 4புள்ளிகள் இழக்கும். அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தால் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளலாம். ஆனால் ஒருவேளை தொடர் 1-1 என்ற கணக்கில் சமமாகும் பட்சத்தில் நியூசிலாந்து அணி தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை:
அணிகள் | தரவரிசை புள்ளிகள் |
நியூசிலாந்து | 126 |
இந்தியா | 119 |
ஆஸ்திரேலியா | 108 |
இங்கிலாந்து | 107 |
பாகிஸ்தான் | 92 |
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி சொந்த மண்ணில் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் இந்திய அணி சொந்த மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் தொடரும் என்று கருதப்படுகிறது. மேலும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படப்போகும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: நான் ஷாரூக் கான்... நடிக்க மாட்டேன் அடிப்பேன்... பந்து நொந்து போகும் பேட்ஸ்மேன் இவன்!