WI vs PAK: வாரி சுருட்டிய வாரிகன்! சொந்த மண்ணில் சோடை போன பாகிஸ்தான்! கலக்கிய கரிபீயன்!
பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன்படுத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்:
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியும் முல்தான் நகரில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி டெயிலண்டர் மோதி அடித்த 55 ரன்கள் உதவியுடன் 163 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வெஸ்ட இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். குறிப்பாக, முதல் டெஸ்ட்டில் பெரும் குடைச்சல் தந்த வாரிகனும், மோதியும் இணைந்து பாகிஸ்தானை 154 ரன்களில் சுருட்டினர்.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ப்ராத்வெய்ட் 52 ரன்கள் எடுக்க, பின்வரிசையில் வந்த விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 35 ரன்கள் எடுத்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு 254 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வாரி சுருட்டிய வாரிகன்:
இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வாரிகன் இந்த முறையும் குடைச்சல் தந்தார். கேப்டன் ஷான் மசூத்தை கெவின் 2 ரன்னில் அவுட்டாக்க, ஹுரைராவை 2 ரன்னில் மோதி அவுட்டாக்க தனது மாயாஜால சுழலில் பாகிஸ்தானை சுருட்டினார் வாரிகன்.
முக்கிய வீரர் பாபர் அசாமை 31 ரன்னில் கெவின் அவுட்டாக்க, கம்ரான் குலாம், காஷீப் அலி, முகமது ரிஸ்வான், சல்மான் அகா மற்றும் சஜித் கான் ஆகிய 5 பேரையும் வாரிகன் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி:
அதிகபட்சம் ஜோமியல் வாரிகன் 16 ஓவர்களில் 4 ஓவர்களை மெய்டன் செய்து 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வாரிகள் சுழலில் மிரட்டியது போல, பாகிஸ்தான் அணியின் நோமன் அலி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவருக்கு ஒத்துழைப்பு தரும் விதமாக சஜீத்கானும் இந்த டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்துடன் இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது. இந்த தொடர் முழுவதும் வாரிகன் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



















